×

கொள்ளிடம் ஆற்றில் 1.75 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு உடைப்பு தடுக்க 50 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்

*இருகரைகளும் கண்காணிப்பு
* தற்காலிக முகாம்கள் அமைப்பு


திருவிடைமருதூர் : திருவிடைமருதூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் 1.75 லட்சம் கன அடி தண்ணீர் இரு கரைகளையும் தொட்டு செல்வதால் கரையோர கிராம மக்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் மாண்டியா மாவட்டங்களில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 இதனால் கொள்ளிடத்தில் தற்போது ஒரு லட்சத்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரி நீராக திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொள்ளிடத்தில் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் கொள்ளிடம் கரையோர கிராம மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை திருவிடைமருதூர் வட்ட தாசில்தார் சுசிலா, மண்டல துணை வட்டாட்சியர்கள் விமல், மனோரஞ்சிதம், வருவாய் ஆய்வாளர் அனுப்பிரியா மற்றும் அலுவலர்கள் கடந்த 2 நாட்களாக ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து கொள்ளிடத்தில் தண்ணீர் அதிகமாக வந்தாலோ, தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலோ பாதிக்கப்படும் கிராம மக்களை தங்க வைத்து உணவு மற்றும் உதவிகள் வழங்க தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தாசில்தார் சுசிலா தெரிவித்தார்.

நேற்று பந்தநல்லூர், உக்கரை, விநாயகரம் தெரு மதகு சாலை ஆகிய இடங்களில் நேரடி களப்பணி மேற்கொண்டு கரையோர கிராம மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.மேலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கரையோர கிராமங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

பொதுப்பணி துறையின் நீர்வள ஆதாரப் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், கொள்ளிடத்தில் வெள்ளம் வந்து தஞ்சை மாவட்டத்திலும் மழை அதிகமாக பெய்தால் கரையோர கிராம மக்களுக்கும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். கர்நாடகத்தில் மழை குறைந்தால் கொள்ளிடத்தில் நீர்வரத்து குறையும். கொள்ளிடத்தில் கரை உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் அபாயம் வந்தால் நிலைமையை சமாளிக்க பொதுப்பணித்துறை தயார் நிலையில் உள்ளோம்.

பொதுப்பணித்துறை சார்பில் 50 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்துள்ளோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி தொடங்கி அணைக்கரை வரையிலான 40 கிலோ மீட்டர் தூரம் கொள்ளிடத்தில் இரு கரைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

Tags : Kodu River , Thiruvidamaruthur,Kollidam River, 50 thousand sandbags
× RELATED கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 25,926 கனஅடி தண்ணீர் திறப்பு