×

திருச்செங்கோடு வட்டாரத்தில் கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோய்

*நாட்டு மருத்துவத்தை நாடும் விவசாயிகள்

திருச்செங்கோடு : திருச்செங்கோடு வட்டாரத்தில், கால்நடைகளை பெரியம்மை நோய் தாக்குவதால், கிராம விவசாயிகள் நாட்டு மருத்துவத்தை நாடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கொல்லப்பட்டி, கரட்டுப்பாளையம், கூட்டப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு, பெரியம்மை நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நோய்க்கு இன்று வரை தடுப்பூசியோ அல்லது மருந்தோ கண்டுபிடிக்கப்படாததால், நாட்டு மருத்துவத்தை நம்பியே சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. பாதிக்கப்பட்ட கால்நடைகள் குணமடைய, நீண்ட காலம் ஆகிறது. பெரியம்மையால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் சரிவர உணவு எடுத்துக் கொள்ள முடிவதில்லை. பால் கறப்பதும் இல்லை. கால்நடைகளுக்கு நீண்ட காலம் அளிக்கப்படும் தொடர் சிகிச்சையால், விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மூலம் அல்லது ஆராய்ச்சி நிலையத்தில் இதற்குரிய  தடுப்பூசியோ, நோய் வந்தவுடன் சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளோ விரைந்து கண்டுபிடிக்கப்பட்டால், கால்நடைகளை காப்பாற்ற முடியும் என்பது விவசாயிகள் வேண்டுகோளாக உள்ளது.
திருச்செங்கோடு வட்டாரத்தில் சுமார் 500 கால்நடைகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.

இந்நிலையில், திருச்செங்கோட்டில் உள்ள தலைமை கால்நடை மருத்துவமனையில், நீண்ட காலமாக கால்நடை மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், கால்நடை வளர்க்கும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், நோயால் பாதிக்கப்படும் தங்களது கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை பெற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். பெரியம்மை நோய் வந்த கால்நடைகளுக்கு, 10 வெற்றிலை, மிளகு 10 கிராம், உப்பு 10 கிராம் சிறிது வெல்லம் ஆகியவற்றை அரைத்து, வாய் வழியாக கொடுத்து வருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் இந்த கலவையை புதிதாக தயாரித்து, 3 மணிக்கு ஒரு தடவை தரவேண்டும். அல்லது பூண்டு, கொத்தமல்லி விதை, சீரகம், துளசி லவங்கப்பட்டை, மிளகு, வெற்றிலை, சின்னவெங்காயம், திருநீற்றுப்பச்சை, நிலவேம்பு பவுடர், மஞ்சள்தூள், வில்வ இலை ஆகியவற்றை அரைத்து, வெல்லம் சேர்த்து வாய் வழியாக 3 மணி நேரத்திற்கு ஒரு முறை தரலாம். இரண்டாம் நாளிலிருந்து 2 வேளைக்கு, நோய் குணமாகும் வரை இந்த மருந்தை தரவேண்டும்.

அதே சமயம், கால்நடைகளுக்கு வெளிப்புறமாக புண்கள் இருந்தால்  குப்பைமேனி, மருதாணி, பூண்டு, வேப்பிலை, துளசி ஆகியவற்றை அரைத்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து, புண்கள் மீது பூச வேண்டும். இதுபோன்ற நாட்டு மருத்துவத்தால் தான், தற்போது கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, நோய் பாதிப்பில் இருந்து கால்நடைகளை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruchengod , Tiruchengode, Farmers, Smallpox
× RELATED சர்ப்ப தோஷம் போக்கும் அர்த்தநாரீஸ்வரர்