×

கொரோனாவால் 1,500க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மரணம்; மருத்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு யார் பொறுப்பு?.. 2019ல் கொண்டு வந்த மசோதாவை எதிர்க்கும் உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி: நாடு முழுவதும் மருத்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு மத்திய அரசு கடுமையான சட்டம் கொண்டு வராமல் முடுக்கி வைத்துள்ளது காரணமா? அல்லது மருத்துவர்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகள் காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே கொரோனா காலத்தில் மட்டும் 1,500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் இறந்துள்ளனர். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நோயாளிகளை காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் பலர் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலையால், நாடு முழுவதும் சுமார் 730 மருத்துவர்கள் உயிர் இழந்ததாக இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) தெரிவித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக பீகார் (115), டெல்லி (109), உத்தரபிரதேசம் (79), மேற்கு வங்கம் (62), ஜார்க்கண்ட் (39), ஆந்திரா (38) என்ற வரிசையில் மாநிலங்களில் மருத்துவர்கள் பலர் இறந்துள்ளனர். முன்னதாக கொரோனாவின் முதல் அலையில் 748 மருத்துவர்கள் இறந்ததாக ஐஎம்ஏ தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் 10,000 மக்கள்தொகைக்கு 10 மருத்துவர்கள் கூட இல்லாத நிலையில், மருத்துவர்கள் 1,500க்கும் மேற்பட்டோர் தொற்றுபாதிப்பால் இறந்தது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். கிட்டதிட்ட 130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்தியாவில், மருத்துவர்களின் பற்றாக்குறை பெருமளவில் உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட்டால், இன்றைய நிலையில் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தேவைப்படுகிறது. இந்த மருத்துவர்களை இரவோடு இரவாக நியமித்துவிட முடியாது என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சம் புதிய மருத்துவர்கள் பணியிடங்களை உருவாக்கி பணியமர்த்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 70,000 புதிய மருத்துவர்கள் படிப்பை முடித்து வெளியே வந்தாலும், அவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இந்திய மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. பல மருத்துவமனைகளில் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளதால், மருத்துவர்கள் பல்வேறு மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். நோயாளிகள் பிரச்னை ஒருபக்கம் என்றால், நோயாளிகளின் உதவியாளர்களிடமிருந்தும் மருத்துவர்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ​சில இடங்களில் நோயாளிகளின் உறவினர்களால் தாக்குதல் போன்ற மிக மோசமான சம்பவங்களும் நடந்துள்ளன.கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், மருத்துவர்கள் மீதான சமீபத்திய தாக்குதல் சம்பவங்களை கண்டித்தும் மருத்துவர்களுக்கான பணி பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் ஐ.எம்.ஏ சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மருத்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது என்றாலும், பெரிய மருத்துவமனைகளில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதில்லை. ஆனால், சிறிய, நடுத்தர வகை மருத்துவமனைகள் அல்லது தனியார் மருத்துவர்கள் பல்வேறு தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். அதே கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தங்களை ஒரு தொழிலாளியாக மட்டுமே கருதுகின்றனர். காரணம், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் சிகிச்சைக்கான பொறுப்பை மருத்துவமனை நிர்வாகம் ஏற்கிறது. பொதுவாக மருத்துவமனைகளில் நடக்கும் தாக்குதல், அத்துமீறல், அலட்சியம் போன்ற சம்பவங்களுக்கு மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், மருத்துவமனை நிர்வாகம் ஆகிய மூன்றுக்கும் பங்குண்டு. நோயாளிகளுக்கான மருத்துவ கட்டணத்தை நியாயமான முறையில் வசூலித்தால், நோயாளிகள் அதிக பலன்களை அடைவார்கள். இது மருத்துவர்கள் மீதான அழுத்தத்தையும் குறைக்கும். தற்போதைய கொரோனா காலத்தில் கட்டண விகிதம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தனியார் மருத்துவமனைகளுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. ஆனால் சில மருத்துவமனைகள் அல்லது நிறுவனங்கள் பல்வேறு யுத்திகளை கையாண்டு பணம் வசூலில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் தனிநபர் சுகாதார காப்பீடும் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பல காப்பீட்டு நிறுவனங்கள் பணத்தை திருப்பிச் செலுத்துவதைத் தவிர்த்து வருகின்றன. அதே நேரத்தில் பிரீமியம் தொகையும் கொரோனா என்ற பெயரில் அதிகரித்துள்ளன. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் அதிகம் என்பதால், காப்பீடு பெற்றவர்கள் கூட நிம்மதியாக சென்று அங்கு மருத்துவம் பார்க்க முடிவதில்லை. இதனால், நடுத்தர வர்க்கம் மக்கள் வெகு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மருத்துவ சிகிச்சைக்காக பலர் தங்கள் சொத்துக்களை விற்கும் செய்திகளும் வருகின்றன. மருத்துவமனைகள் எந்தவிதமான மருத்துவ சேவையை வழங்குகின்றன என்பது குறித்த உத்தரவாதத்தை அளிப்பதில்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கு, மருத்துவ சிகிச்சை அளிப்பதில் எந்தவொரு தெளிவான உத்தரவாதமும் இல்லை. எய்ம்ஸ் போன்ற உலகத் தரம் வாய்ந்த நிறுவனத்திலும் கூட, பல நேரங்களில் இலவச மருந்துகள் கிடைப்பதில்லை. வெளியிடங்களில் மருந்துகள் எழுதித்தரப்படுகின்றன. அதற்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கும் நிலையில், சமீபத்தில்தான் அதற்கும் சில விலக்குகள் அளிக்கப்பட்டன. இத்தனை பிரச்னைகளுக்கும் மத்தியில் நோயாளிகள் மருத்துவர்களிடம் சிகிச்சை பார்ப்பதால், சில இடங்களில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி தாக்குதல் வரை சென்றுவிடுகிறது. மருத்துவ பாதுகாப்பு சட்டம் (எம்.பி.ஏ) குறைந்தது 19 மாநிலங்களில் அமலாகி உள்ளன. இருந்தும், மருத்துவர், நர்சிங், சுகாதார ஊழியர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன. சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகள் (வன்முறை மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்) மசோதா, 2019-இன்படி, மருத்துவர் அல்லது சேவையில் ஈடுபட்டுள்ள பிற சுகாதார ஊழியர்களை யாராவது தாக்கினால், குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இந்த மசோதா 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் இந்த மசோதாவை எதிர்த்தது. ஏற்கனவே நாட்டில் போதுமான சட்ட விதிகள் உள்ளன என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.தற்போது கொரோனா பரவல் வந்த பின்னர் கடந்தாண்டு இயற்றிய தொற்றுநோய்கள் திருத்த சட்டத்தின்படி, சில விதிமுறைகளை மத்திய அரசு சட்டமாக்கி உள்ளது. ஆனால், ஐஎம்ஏ போன்ற தொழில்முறை அமைப்புகள், 2019ல் கொண்டுவரப்பட்ட மசோதாவை சட்டமாக்க வேண்டும் என்றும், மருத்துவர்கள் மீதான தாக்குதல்களையும், அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை கருத்தில் கொண்டு, உள்துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து ஐஎம்ஏ நிர்வாகிகள் கூறுகையில், ‘மத்திய அரசு 2019ம் ஆண்டில் கொண்டு வந்த ‘சுகாதாரச் சேவை பணியாளா்கள் மற்றும் மருந்துவமனைகள் மசோதா – 2019’-இன்படி பணியிலிருக்கும் மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்கள் மீது தாக்கதல் நடத்துவோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்கிறது. ஆனால், அமைச்சகங்களிடையேயான ஆலோசனையின்போது இந்த வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் தள்ளுபடி செய்துவிட்டது. நடப்புச் சூழலில் அந்த மசோதா, இந்திய தண்டனையியல் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் விதிகளுடன் சோ்த்து, குறிப்பிட்ட அவகாசத்துக்குள் விசாரணையை நிறைவு செய்யும் வகையில் அமல்படுத்தப்பட வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த மருத்துவா்களின் குடும்பத்துக்கு அரசு உரிய ஆதரவு வழங்க வேண்டும். மத்திய சுகாதார புலனாய்வு அமைப்பு (சிபிஹெச்ஐ) மூலமாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கண்டறிந்து அனைவருக்கும் உரிய இழப்பீடு கிடைக்கச் செய்ய வேண்டும்’ என்றனர். இருந்தும், கொரோனா சூழலில் மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கு எதிராக வன்முறைகள் அவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதே உண்மை.தொற்றுநோய்கள் திருத்த சட்டம்!மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, கடந்த சில நாட்களுக்கு முன் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் எழுதிய கடிதத்தில், ‘மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல்கள் நடக்கும் போது, அது அவர்களின் மன உறுதியைக் குலைத்துவிடும். இன்றைய சூழலில், மருத்துவர்கள் இதுபோன்ற சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துகிறபோது, தாக்கும் நபர்கள் மீது கடந்தாண்டு இயற்றிய தொற்றுநோய்கள் திருத்த சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். கடந்தாண்டு இயற்றிய தொற்றுநோய்கள் திருத்த சட்டத்தின்படி, மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது யாரேனும் தாக்குதல்கள் நடத்தினால், அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.2 லட்சம் வரையில் அபராதமும் விதிக்க முடியும். தாக்குதலில் கொடுங்காயங்கள் ஏற்பட்டிருந்தால், தாக்கிய நபருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.5 லட்சம் வரையில் அபராதமும் விதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது….

The post கொரோனாவால் 1,500க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மரணம்; மருத்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு யார் பொறுப்பு?.. 2019ல் கொண்டு வந்த மசோதாவை எதிர்க்கும் உள்துறை அமைச்சகம் appeared first on Dinakaran.

Tags : Ministry of the Interior ,New Delhi ,Central Government ,Corona ,Interior Ministry ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...