×

என்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் விதிமீறி அமைக்கப்பட்ட  40  ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மற்றும் தற்காலிக கடைகளை அகற்ற குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த குழுவானது திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அந்தந்த மண்டலங்களில் காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்பு கடைகளை  அகற்றி வருகின்றனர்.

இதனிடையே, சென்னை  உயர் நீதிமன்ற உத்தரவின்படி பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட 400 ஆக்கிரமிப்பு கடைகள் ஏற்கனவே அகற்றப்பட்டன. மேலும், அங்கு கடை நடத்தியவர்களுக்கு மாநகராட்சி சார்பில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சாலையில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு கண்காணிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த சாலையில் மீண்டும் சிலர் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

அதன்பேரில், 5வது மண்டல பகுதி செயற்பொறியாளர் சொக்கலிங்கம் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஆய்வு நடத்தினர். அதில், ஆங்காங்கே சிலர் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் பாதுகாப்புடன் 40 கடைகளை அகற்றினர். இதில், 10 தள்ளுவண்டி கடைகள் மற்றும் 30 கடைகள் அகற்றப்பட்டு, மாநகராட்சி லாரியில் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவை மீறி நடைபாதையை ஆக்கிரமித்து கடை அமைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.


Tags : NSC Bose , Removal of encroachment shops on NSC Bose road footpath: Corporation action
× RELATED ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்