×

ரூ.13.90 கோடியில் நடைபெற்று வரும் வீராங்கல் ஓடை தூர்வாரும் பணியை அமைச்சர்கள் ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் வீராங்கல் ஓடையை தூர்வாரும் பணியை அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆண்டுதோறும் பருவ மழை காலங்களில் ஆதம்பாக்கம்,  வாணுவம்பேட்டை, நிலமங்கை நகர், பாலாஜி நகர், சரஸ்வதி நகர், ஏஜிஎஸ் காலனி,  புழுதிவாக்கம், ராம் நகர், பத்மாவதி நகர், சீனிவாசா நகர் போன்ற பகுதிகளில்  வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதை தடுக்க 4 கிலோ  மீட்டர் நீளத்தில் வீராங்கல் ஒடை அமைக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த  ஓடையில் சாக்கடை நீர் மற்றும் கழிவுகள் கலந்ததுடன், செடி, கொடிகள் வளர்ந்து  தூர்ந்தது.

எனவே, இந்த ஓடையை தூர்வாரி, சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்தது. அதன்பேரில், நீர்வளத்துறை சார்பில் வீராங்கல் ஒடையை தூர்வாரி  சீரமைத்து, பக்கவாட்டு தடுப்புச்சுவர் அமைக்க, நீர்வளத்துறை சார்பாக ரூ.13.90 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டு, கடந்த ஜூலை மாதம் பணி தொடங்கியது. கடந்த 4 மாதங்களாக ஓடையை தூர்வாரி பக்கவாட்டு சுவர் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர், நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரியுடன் சென்று நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது, பணிகளை விரைந்து முடிக்கும்படி ஒப்பந்ததாரரை கேட்டுக் கொண்டனர். ஆய்வின்போது ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், மாநகராட்சி கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத், ஆலந்தூர் மண்டல மாநகராட்சி செயற்பொறியாளர் வளர்மதி, ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக செயலாளர் குணாளன், கவுன்சிலர் பாபு, திமுக நிர்வாகிகள் கே.ஆர்.ஜெகதீஸ்வரன், ஏசுதாஸ், ஜி,ரமேஷ் சுந்தர்ராஜன், வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Veerangal , Ministers review ongoing Veerangal stream dredging work at Rs.13.90 crore: Order to complete it soon
× RELATED வீராங்கல் ஓடையில் ஆக்கிரமித்து கட்டிய 3 பாலங்கள் இடிப்பு