மேட்டூர் அணையில் இருந்து 1.95 லட்சம் கனஅடி நீர் திறப்பு

மேட்டூர்,: நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையில் இருந்து 1.95 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று மாலை 1.85 லட்சம் கனஅடி நீர் வந்தது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை 8 மணிக்கு 1.70 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 1.95 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. காவிரியின் உப நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லை விட மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியாக நீடிக்கும் நிலையில், உபரிநீர் முழுமையாக ஆற்றில் திறந்து விடப்படுகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக 21 ஆயிரத்து 500 கனஅடி,  16 கண் மதகுகள் வழியாக 1 லட்சத்து 73 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்திற்கு 200 கனஅடி திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதால், மேட்டூர்- இடைப்பாடி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால், மேட்டூரிலிருந்து சங்கிலி முனியப்பன் கோயில், பொறையூர், ரெட்டியூர், கோல்நாய்க்கன்பட்டி, தெக்கத்திக்காடு, பூலாம்பட்டி, இடைப்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் தண்ணீரில் சென்று வருகின்றனர். மேலும், கனரக வாகனங்கள் ஊர்ந்தபடியே செல்கின்றது.

அனல் மின்நிலைய சாலையை ஒட்டி தண்ணீர் செல்வதால் சாம்பல் லோடு வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதால் தென்னை மற்றும் வாழை மரங்கள், பருத்தி செடிகள் மூழ்க தொடங்கியுள்ளன. நீர் திறப்பு அதிகரிப்பால் 11 மாவட்ட கலெக்டர்களுக்கும்  நீர்வளத்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: