×

புதிய காங்கிரஸ் தலைவர் யார்? நாடு முழுவதும் இன்று வாக்குப்பதிவு: மல்லிகார்ஜூனா கார்கே - சசிதரூர் போட்டி; வாக்குகள் நாளை மறுதினம் எண்ணப்படும்

புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நாடு முழுவதும் இன்று நடக்க உள்ளது. மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே - சசிதரூர் போட்டியிடுகின்றனர். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நாளை மறுதினம் எண்ணப்பட்டு, அன்று மாலை முடிவுகள் அறிவிக்கப்படும். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார். உடல் நலக்குறைவால் அவரால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருக்கும் நிலையில், கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கடந்த மாதம் 22ம் தேதி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இத்தேர்தலில், சோனியா, ராகுல், பிரியங்கா என காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. கடந்த 24ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில், கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு தேர்தலில் களமிறங்கி உள்ளனர். இரு தலைவர்களும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆதரவு திரட்டினர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் இன்று நடக்க உள்ளது. அனைத்து மாநிலத்திலும் தலைநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

இதில், வாக்குரிமை பெற்ற 9,000 கட்சி பிரதிநிதிகள் வாக்களிக்க உள்ளனர். வாக்காளர்கள் அனைவருக்கும் க்யூஆர் கோடுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 711 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் 4 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பெட்டிகள் சீலிடப்பட்டு, விமானம் மூலமாக டெல்லிக்கு கொண்டு வரப்படும். இதைத் தொடர்ந்து நாளை மறுதினம் வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினம் மாலையில் முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோற்ற பிறகு, பல மாநிலங்களிலும் ஆட்சியை இழந்துள்ளது. தற்போது ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. வரும் 2024ம் ஆண்டு மீண்டும் மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

*காந்தி குடும்பத்தின் ஆதரவு தவறில்லை

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தாங்கள் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி கூறி உள்ளனர். ஆனாலும், கட்சியின் மேலிடத்திற்கு விருப்பமான வேட்பாளராக மல்லிகார்ஜூனா கார்கே கருதப்படுகிறார். அவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. கார்கே தலைவரானால் அவர் கட்சியின் பொம்மை தலைவராக செயல்படுவார் என பாஜ விமர்சிக்கிறது. இது குறித்து கார்கே நேற்று அளித்த பேட்டியில், ‘‘காந்தி குடும்பத்தின் ஆலோசனையையும், ஆதரவை பெறுவதில் வெட்கப்பட வேண்டியதில்லை. அவர்கள் காலம் காலமாக நாட்டிற்கு சேவை செய்து வருகின்றனர். அவர்களின் ஆலோசனைகள் கட்சிக்கு நன்மை பயக்கும், எனவே நான் நிச்சயமாக அவர்களின் ஆலோசனையையும் ஆதரவையும் பெறுவேன். அதில் வெட்கமில்லை. உங்களின் (ஊடகங்கள்) அறிவுரையால் ஏதாவது பயன் இருந்தால், நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன். அவர்கள் இந்த கட்சிக்காக உழைத்திருக்கிறார்கள், அவர்களின் ஆலோசனையைப் பெறுவது எனது கடமை’’ என்றார்.

*24 ஆண்டுக்குப் பின்…

தேர்தலில் காந்தி குடும்பத்தினர் இல்லாமல் 24 ஆண்டுக்குப் பின் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடக்க உள்ளது. கடைசியாக 1997ல் நடந்த தேர்தலில் சீதாராம் கேசரி, சரத் பவார், ராஜேஷ் பைலட் போட்டியிட்டனர். இதில், சீதாராம் கேசரி வெற்றி பெற்று தலைவரானார். அதற்கு அடுத்த ஆண்டே கேசரிக்குப் பதிலாக சோனியா கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். 2000ம் ஆண்டில் நடந்த தேர்தலில் சோனியா 7,400 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரசதா வெறும் 94 வாக்குகளை மட்டுமே பெற்று தோற்றார். அதன் பின் 20 ஆண்டுக்கும் மேலாக காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த சோனியா, அதிக ஆண்டுகள் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றார். இடையில், கடந்த 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை ராகுல் காந்தி கட்சித் தலைவராக இருந்தார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று 2019ல் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தார். அதன்பின் இடைக்கால தலைவராக சோனியா பதவி ஏற்றார். சுதந்திரத்திற்குப் பின் கட்சி தலைவராக காந்தி குடும்பத்தினர் 40 ஆண்டுகள் பதவி வகித்துள்ளனர்.


Tags : Congress ,Mallikarjuna Kharge - Sasidharoor , Who is the new Congress leader? Polling today across the country: Mallikarjuna Kharge - Sasidharoor contest; The votes will be counted the day after tomorrow
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...