×

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 50ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணையில் இருந்து 45 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 50ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை வலுத்துள்ளதால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 32,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 50ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரியில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது.

அதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 28,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நண்பகலில் 35,000 கனஅடியாகவும், மாலை 4 மணிக்கு 45,000 கனஅடியாகவும் அதிகரித்தது. இன்று காலையும் நீர்வரத்து 45ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், உபரிநீர் அப்படியே காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக 21,500 கனஅடியும், உபரிநீர் போக்கி வழியாக 23,500 கனஅடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கனஅடியும்தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மேட்டூர் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Okanagan ,Mettur Dam , Water flow in Okanagan increases to 50,000 cubic feet: 45,000 cubic feet of water released from Mettur Dam
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு