×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூருக்கு 2 டன், சார்ஜாவுக்கு 3 டன் இனிப்பு கோவையில் இருந்து ஏற்றுமதி: ஜிஎஸ்டி வரியால் விலை அதிகரிப்பு

கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து சிங்கப்பூர் மற்றும் சார்ஜாவுக்கு 5 டன் இனிப்புகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. உலகம் முழுவதும் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இந்தியாவில் தீபாவளி போன்ற பண்டிகைகள் கொண்டாடும் போது அந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் அதை கொண்டாடுவது வழக்கம். அதைப்போல தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகையின்போது வளைகுடா நாடுகள் மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள். இதற்காக அந்த நாடுகளுக்கு கோவையிலிருந்து கட்டு கட்டாக கரும்பு விமானத்தில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் சார்ஜாவுக்கு இனிப்புகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதன்படி, சிங்கப்பூருக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் மூலம் நாளை முதல் 2 டன் இனிப்புகளும், சார்ஜாவுக்கு ஏர் அரேபியா விமானம் மூலம் 3 டன் இனிப்புகளும் அனுப்பப்பட உள்ளன.

இதுகுறித்து ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி கோவையிலிருந்து 2 வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் மூலம் இனிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். அதன்படி, சிங்கப்பூருக்கு 2 டன் இனிப்புகளும், சார்ஜாவுக்கு 3 டன் இனிப்புகளும் ஏற்றுமதி செய்ய புக்கிங் ஆகி உள்ளன. இவை அனைத்தும் நாளை (சனிக்கிழமை) முதல் தினமும் 200 முதல் 300 கிலோ வரை அனுப்பி வைக்கப்படும். மைசூர்பா, லட்டு, அல்வா, மில்க் இனிப்புகள் பேக்கிங் செய்து அனுப்பப்படும்.

இதற்கு முன்பு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது. ஆனால் கடந்த 1ம் தேதி முதல் ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால், சிங்கப்பூர் மற்றும் சார்ஜாவுக்கு அனுப்பப்படும் இனிப்புகளின் விலை அதிகரித்துள்ளது.

உதாரணத்துக்கு ஒரு கிலோ தரமான அல்வா கோவையில் விலை ரூ.700 என்றால் அதை சார்ஜாவுக்கு அனுப்ப ரூ.450 விமான கட்டணம் மட்டும் ஆகிறது. அதற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி ரூ.126. அதன்பின்னர் அதை கிளியர் செய்து வெளியே அனுப்பி சார்ஜாவில் கடையில் விற்கும்போது ஒரு கிலோ அல்வா ரூ.1,800 முதல் ரூ1,900 வரை ஆகிறது.

ஆனால், மற்ற நாட்டு கம்பெனிகள் இதை விட குறைவான விலைக்கு அங்கு அல்வா விற்கின்றன. இதனால், ஏற்றுமதி பாதிக்கிறது. எனவே ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Singapore ,Sharjah ,Coimbatore ,Diwali , Exports of sweets from Coimbatore: 2 tonnes to Singapore, 3 tonnes to Sharjah ahead of Diwali: GST increases prices
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...