×

வேலூர் கொணவட்டத்தில் ரத்தக்கறையுடன் ஊசிகள் தேசிய நெடுஞ்சாலையோரம் மருத்துவ கழிவுகள் மூட்டை மூட்டையாக வீச்சு-நோய் தொற்று அச்சத்தில் மக்கள்

வேலூர் : வேலூர் கொணவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் ெதாடர்ந்து குப்பைகள் கொட்டிய நிலையில் தற்போது மருத்துவ கழிவுகள் வீசப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி முழுவதும் தினசரி 200 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் வீடு, வீடாக சென்று மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து பெறப்படுகிறது. இதனை மாநகராட்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையங்களுக்கு கொண்டு சென்று தரம் பிரிக்கின்றனர். அதிகளவிலான குப்பைகள் மாநகராட்சியில் சேகரிக்கப்படுவதால், திடக்கழிவு மேலாண்மை மையங்களில் குப்பைகள் தேங்கிக்கிடக்கிறது.

வேலூர் பகுதிகளில் உள்ள கறிக்கடைகள் உட்பட பல்வேறு இடங்களில் சேரும் குப்பைகளை பலர் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டி வருகின்றனர். குறிப்பாக கொணவட்டம், சதுப்பேரி பகுதிகளில் சர்வீஸ் சாலையோரம் இறைச்சி கழிவுகள் அதிகமாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் எந்த பயனும் ஏற்படவில்லை.

எனவே குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க குழு அமைத்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சர்வீஸ் சாலையோரம் குப்பை கொட்டுபவர்களை கண்காணித்து பிடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் தனி குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் குப்பை கொட்டினால் ₹500 அபராதமும், அதை வீடியோ எடுத்து அளிப்பவர்களுக்கு ₹200 பரிசும் வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. ஆனால், பொதுமக்கள் தொடர்ந்து பொதுஇடங்களில் குப்பை கொட்டி வருகின்றனர்.

இந்நிலையில், வேலூர் கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் குப்பைகள் மூட்டை, மூட்டையாக வீசப்பட்டுள்ளது. நேற்று காலை மருத்துவ கழிவுகளும் அதிகளவில் வீசப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் நடந்துகூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், `கொணவட்டம் பகுதியில் உள்ள இறைச்சி கடைகள் மட்டுமின்றி அருகே இருக்கும் பகுதிகளில் இருக்கும் கடைகளில் இருந்தும் கழிவுகளை மூட்டைகளில் கட்டி வீசி விடுகின்றனர். தற்போது, மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகளும் அதிகளவு இப்பகுதியில் கொட்டியுள்ளனர். இதனால் சர்வீஸ் சாலை முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளில் ஊசி, ரத்த கறையுடன் கூடிய மருத்துவ பொருட்கள் உள்ளது.

தற்போது, மழை காலம் தொடங்கி உள்ளதால், மழை பெய்யும்போது, மழைநீர் மருத்துவகழிவுகளுடன் கலந்து, அருகே சதுப்பேரியில் கலந்து நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கொணவட்டம் சர்வீஸ் சாலையோரம், சிசிடிவி கேமரா வைத்து, குப்பை கொட்டுபவர்களை கண்காணித்து அபராதம் விதித்து, போலீசில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தினார்கள்.

மருத்துவ கழிவுகள் என்றால் என்ன?

மருத்துவக் கழிவுகள் என்பது மருத்துவமனையில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்குப் பிறகு, வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்கள் ஆகும். அதாவது பயன்படுத்தப்பட்ட சிரிஞ்சுகள், ஊசிகள், கத்தி, ரத்தக்குழாய்கள், செயற்கை சுவாசக் குழாய்கள், ரத்தம் மற்றும் சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், பேண்டேஜ் துணிகள், கையுறைகள் போன்றவை. மருத்துவ ஆய்வுக் கூடங்களிலிருந்து நுண்ணுயிர்க் கிருமிகள் கலந்த கழிவுகள், காலாவதியாகும் மருந்து பொருள்கள், ரத்த வங்கிகளில் சேமிக்கப்படும் ரத்தம் கூட குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்னர் பயனற்ற கழிவாகிறது. இவ்வாறு சேரும் கழிவுகளை முறையாக அழிப்பதற்கென, சுற்றுச்சூழல் விதிமுறைகள் உள்ளன. அந்த விதிகளை பல மருத்துவமனைகள் சரியாக பின்பற்றாமல், சாலையோரங்களில் வீசிவிட்டு செல்கின்றன.

Tags : Vellore ,Konavattam , Vellore: In Vellore Konavattam, medical wastes are currently littered along the national highway.
× RELATED வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம்...