×

திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பலகாரங்கள் தரமற்ற முறையில் விற்றால் வாட்ஸ்அப்பில் புகார் அளிக்கலாம்-கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை : தீபாவளி பண்டிகை பலகாரங்களில் கலப்படம் மற்றும் தரமற்ற நிலையில் இருந்தால், வாட்ஸ்அப் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்திருப்பதாவது:பண்டிகை காலங்களில் விதவிதமான பலகாரங்கள், இனிப்பு, கார வகைகள் போன்றவை அதிக அளவில் விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரங்கள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவுப் பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி பயன்படுத்துவதும், உறவினர்களுக்கு வழங்குவதும் நமது பாரம்பரியமாகும்.

தீபாவளி பண்டிகையில், இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும், உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து, முறையாக உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாகும்.இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள், தரமான மூலப் பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்க கூடாது.

பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு, அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாடு காலம், சைவம் மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை குறிப்பிடுவது அவசியம்.உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்ககளும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் கீழ் தங்களது வியாபாரத்தை பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.

அதற்கான இணையதளத்தின் மூலமும் தங்களது வியாபாரத்தை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், உணவு தயாரிப்பாளர்கள் பயிற்சிகளை பெற்றிருக்க வேண்டும். பொது மக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது உணவு பாதுகாப்புத் துறையின் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களில் விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.

மேலும், உணவு பொருட்கள் தொடர்பான புகார்கள் இருந்தால், 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும், திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் நியமன அலுவலரிடம் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Thiruvannamalai District ,Diwali Balakaras , Thiruvannamalai: If Diwali festivals are adulterated and substandard, public complains through WhatsApp
× RELATED வெயிலை சமாளிக்க குளிர்பான கடைகளை...