×

ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்க எதிர்ப்பு: எஸ்ஆர்எம்யூ சார்பில் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில், ‘‘தேசிய நவீன மயமாக்கல் என்ற பெயரில் ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருவதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ரயில்வேதுறையை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் குறித்து எஸ்.ஆர்.எம்.யூ., பொதுச்செயலாளர் கண்ணையா நிருபர்களிடம் கூறியதாவது:ரயில்வே துறையை தனியார் மயமாக்கல் என்ற பெயரை மாற்றி நவீன மயமாக்கல் என்ற பெயரில் மக்களை ஒன்றிய அரசு ஏமாற்றி வருகிறது. அந்த வகையில், இதுவரை 150 சுற்றுலா ரயில்களை தனியாருக்கு கொடுத்துள்ளனர்.

இந்த ரயிலை அரசு இயக்கினால் 28 லட்சம் தான் மக்களிடம் வசூலிக்கப்படும், ஆனால் தனியார் நிறுவனம் மக்களிடம் இருந்து 44 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்கிறது. ஒன்றிய அரசு வந்தே பாரத் என்ற 200 ரயிலை தயாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரயில்வே தயாரித்தால் இதன் செலவு வெறும் ரூ. 98 கோடி. அதே ரயிலை தனியார் தயாரித்து ரூ. 137 கோடி ரயில்வே நிர்வாகத்துக்கும் நிலை உள்ளது. வந்தே பாரத் ஐசிஎன்-ல் ரயில் பெட்டிகளை ரயில்வே ஊழியர்களே தயாரித்தாலும், அதையே தனியார் நிறுனவம் ரயில்வேதுறைக்கு அதிக விலைக்கு விற்கின்றனர்.

ரயில்வே தனியார் மையத்தை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ நடத்தும் போராட்டங்களுக்கு தமிழக முதல்வர் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல் கேரள முதல்வரும் தனது ஆதரவை அளிப்பதாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் மக்கள் ஒன்றுதிரண்டு போராடினால் மட்டுமே ரயில்வே துறையை ஒன்றிய அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.


Tags : SRMU , Protest against Privatization of Railways: Fasting on behalf of SRMU
× RELATED திருச்சியில் SRMU தொழிற்சங்கத்தினர் 2வது நாளாக உண்ணாவிரதம்..!!