×

கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 22 % வரை தளர்த்த வேண்டும்: கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்

சென்னை: விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவிகிதம் வரை தளர்த்த வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:
பாரதிய ஜனதா கட்சி 2014 தேர்தல் பரப்புரையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவோம், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக கூட்டுவோம் என வாக்குறுதி கொடுத்தனர். கடந்த எட்டு ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாழடிக்கின்ற வகையில் மூன்று வேளாண் சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்தது.

அந்த மூன்று சட்டங்களிலும் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து எந்த குறிப்பும் இல்லை. இதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் ஏற்படாத என்ற நிலையில் தலைநகர் டெல்லி நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஓராண்டு காலம் வெயில், மழை, குளிர் என பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினார்கள்.

வானொலியில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று மனதில் குரல் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே உரையாற்றுகிற பிரதமர் மோடி தமது அலுவலகத்திலிருந்து மிக அருகாமையில் போராட்டம் நடத்திய விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்ததில்லை. இதன்மூலம் விவசாயிகளை உதாசீனப்படுத்துகின்ற போக்கு தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது. இறுதியாக வடமாநில தேர்தலை மனதில் கொண்டு பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்று விவசாயிகள் பிரச்சினையை ஆராய ஒரு குழு ஒன்றை அமைத்தார்.

அந்த குழு இதுவரை விவசாயிகளோடு கலந்து பேசவில்லை. விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. எல்லாமே கண் துடைப்பு நாடகமாகவே நடந்து வருகிறது. தற்போது விவசாயிகள் உற்பத்தி செய்கிற 23 விளைப் பொருட்களுக்கு மத்திய அரசு  குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்காமல் உள்ளது. இந்த விலையை நிர்ணயம் செய்ய வேண்டிய மத்திய அரசின் குழு விவசாயிகளோடு கலந்து பேசவில்லை.

இதனால் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காத நிலை உள்ளது. பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதியின்படி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின் பேரில் உற்பத்தி செலவோடு 50 சதவிகிதம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்வோம் என்ற பரிந்துரையை நிறைவேற்ற பா.ஜ.க. அரசு தயாராக இல்லை. விவசாய சந்தையை அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்வது தான் பா.ஜ.க. அரசின் நோக்கமாகும். அதனால் தான் குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது.

விவசாயிகளுடைய கோரிக்கையான விவசாய விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டு அந்த விலையில் தான் கொள்முதல் செய்ய வேண்டுமென்று சட்டப்படி கட்டாயமாக்க வேண்டும் என்பதை மோடி அரசு ஏற்க தயாராக இல்லை. இந்த கோரிக்கை நிறைவேறினாலொழிய விவசாய சந்தையில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்படும். இதன்மூலம் விவசாயிகளுக்கு விரோதமான அரசாக பா.ஜ.க. செயல்படுவதோடு கார்ப்பரேட் ஆதரவு அரசாகத் தான் நடைமுறையில் செயல்பட்டு வருகிறது. இத்தகைய போக்கின் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பா.ஜ.க. அரசு சீர்குலைத்து வருகிறது.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவிகிதம் வரை தளர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருக்கிறது. இந்த கோரிக்கையை ஏற்று விவசாயிகளிடமிருந்து நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்யலாம் என அனுமதித்து உத்தரவிட வேண்டுமென்ற கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். எதிர்பாராத மழைக் காலங்களில் விவசாயிகள்  உற்பத்தி செய்கிற நெல் தானியங்கள் ஈரப்பதம் அடைந்து விற்க முடியாத அவலநிலை உள்ளது. எனவே, தமிழக அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : K. S.S. Anekiri , Paddy Purchase, K.S. Alagiri, BJP
× RELATED இந்தியை திணிக்க முயல்வது சட்ட விரோதம் : கே.எஸ்.அழகிரி அறிக்கை