×

இந்தியை திணிக்க முயல்வது சட்ட விரோதம் : கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்று இந்திய குற்றவியல் சட்டங்களை மறு சீரமைத்து புதிய சட்டங்கள் கொண்டு வருவதற்கான 3 புதிய மசோதாக்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டத்திற்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா மசோதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு பதிலாக பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா, இந்திய சாட்சியங்கள் சட்டத்திற்கு பதிலாக பாரதிய சாக்ஷிய மசோதா ஆகிய பெயர் மாற்றங்களோடு புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தி போசாத மக்கள் மீது அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பிற்கு எதிராக இத்தகைய பெயர் மாற்றம் அப்பட்டமான இந்தி மொழி திணிப்பாகும். இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிக்க முயல்வது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும். இதை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், அரசியல் பேராண்மையோடு தமது கடுமையான எதிர்ப்பினை விரிவாக பதிவு செய்திருக்கிறார். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் கொள்கையை மொழி திணிப்பு என்று நிர்மலா சீதாராமன் கூறுவது எந்த வகையிலும் நியாயமற்றதாகும்.

தமிழ்நாட்டின் கள நிலவரத்தை புரிந்து கொள்ளாமல், தமிழக மக்கள் மீது இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க முயல்வாரேயானால் அதன் விளைவுகளை பாஜ கடுமையாக சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். அதிகார மமதையில் ஆட்சியில் இருந்து கொண்டு தமிழக மக்களை கிள்ளுக் கீரையாக நினைத்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும். தமிழக மக்கள் எதையும் சகித்துக் கொள்வார்கள். ஆனால், இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பார்களேயானால் தமிழகம் தழுவிய கடுமையான போராட்டத்தை மீண்டும் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜவினரை எச்சரிக்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post இந்தியை திணிக்க முயல்வது சட்ட விரோதம் : கே.எஸ்.அழகிரி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil ,Nadu ,Congress ,K.K. S.S. Alakiri ,Parliamentary Meeting Series ,K. ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...