×

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் ‘பிக்பாக்கெட்’ ஆசாமிகள் கைவரிசை-காவல்துறை கண்காணிக்க கோரிக்கை

வேலூர் : வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மாலை நேரங்களில் பஸ்சை பிடிக்கும் அவசரத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பணத்தையும், உடமைகளையும் அபேஸ் செய்யும் பிக்பாக்கெட் ஆசாமிகளின் அட்டகாசத்துக்கு காவல்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் நகரிலும் சுற்றுப்புறங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் அரசு டவுன் பஸ்களிலேயே பயணம் செய்கின்றனர்.

இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் பெரும்பாலான டவுன் பஸ்கள் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்தே இயக்கப்படுகிறது.

குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் இயக்கப்படுவதால் மாலை நேரங்களில் தங்கள் ஊருக்கு திரும்புவதற்காக அவசர, அவசரமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஓடிச் சென்று முண்டியடித்து பஸ்சில் ஏறுகின்றனர். அவர்கள் பஸ்சில் ஏறி தங்கள் பாக்கெட்டை பார்க்கும்போதோ, கைப்பையை பார்க்கும்போதோதான் தங்கள் பணத்துடன் உள்ள பர்ஸ், பாக்கெட்டில் அப்படியே வைக்கப்பட்ட பணம், செல்போன், வாட்ச், மோதிரம் ஆகியவை அபேஸ் செய்யப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகின்றனர்.

அதற்குள் பஸ் புறப்பட்டு விடுவதால் வேறு வழியின்றி பணம் மற்றும் உடமைகளை பறிகொடுத்த சோகத்துடன் ஊர் திரும்புகின்றனர். இந்த அனுபவம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மட்டுமின்றி பணி நிமித்தமாக வேலூர் வந்து செல்லும் அரசு, தனியார்துறை அலுவலர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் பலருக்கும் ஏற்படுகிறது.

எனவே, வேலூர் நகரை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் டவுன் பஸ்கள் மற்றும் அரசு பஸ்களை இயக்குவதுடன், பழைய பஸ் நிலையத்தில் ‘பீக் அவர்ஸ்’ என்று கூறப்படும் காலை, மாலை நேரங்களில் சாதாரண உடைகளில் காவலர்களை அதிகளவில் பணியில் அமர்த்தி கண்காணிப்பை காவல்துறை அதிகப்படுத்த வேண்டும். மேலும், அரசு மற்றும் தனியார் பஸ்களில் கண்காணிப்பு கேமரா வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Vellore Old Bus Station , Vellore: School and college students who are in a hurry to catch a bus in the evenings at Vellore Old Bus Station, have money.
× RELATED பயணிகள் நடந்துகூட செல்லமுடியாமல்...