×

வடகிழக்கு பருவமழையை வரவேற்கும் நிகழ்ச்சி மானூர் பெரியகுளம் மடையில் ‘மழைக்கொடை’ விழா-பல கிராம விவசாயிகள் பங்கேற்பு

நெல்லை : வடகிழக்கு பருவமழையை வரவேற்கும் விதமாக நெல்லை அடுத்துள்ள மானூர் பெரியகுளம் மடையில் மழைக்கொடை விழா நடந்தது. இதில் பல கிராம விவசாயிகள் பங்கேற்றனர்.
நெல்ைல மாவட்டத்தில் உள்ள பெரிய முக்கிய குளமாக மானூர் பெரிய குளம் உள்ளது. இந்த குளம் 190 மில்லியன் கனஅடி கொள்ளளவு உடையது.

இதன் மூலம் மானூர், மாவடி, மதவக்குறிச்சி, எட்டான்குளம் ஆகிய கிராமங்களில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். இந்த குளம் ஒரு முறை நிரம்பினால் இப்பகுதியில் 2 போகம் நெல் சாகுபடி நடக்கும் அளவிற்கு தண்ணீர் கிடைக்கும். கடந்த 2019ம் ஆண்டு இக்குளம் இதன் முழு கொள்ளளவை எட்டியது. பின்னர் 2021ம் ஆண்டும் நிரம்பி வழிந்தது.

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு மற்றும் ெதன்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக இக்குளக்கரையில் உள்ள 7 கன்னிகள் உடைய வடநாச்சியம்மன் கோயிலில் விவசாயிகள் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்துவர். மேலும் பங்குனி உத்திர திருநாளில் விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் இக்கோயிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம். இந்த அம்மன் கோயில் அருகே குளக்கரைக்கு கீழே உள்ள பெரிய மடையின் மையப்பகுதியில் குமரிக்கடல் என அழைக்கப்படும் நாககன்னி அம்பாள் உள்ளது. இங்கும் சிறப்பு வழிபாடு நடத்துவர்.

மழைக்கொடை என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு பூஜையை தொடர்ந்து பருவமழை நன்றாக பெய்துவருவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல்கள் உருவாகி வரும் நிலையில் இந்த மழையை வரவேற்று நேற்று மானூர் மற்றும் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் மானூர் பெரிய குளத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்தனர். பின்னர், வடநாச்சியம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.

பெரிய மடையின் மையப்பகுதியில் உள்ள நாககன்னி அம்பாளுக்கும் இந்த ஆண்டு சிறப்பாக மழை பெய்து பெரிய குளம் நிரம்ப வேண்டும் என வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தினர். சர்க்கரை பொங்கலிட்டு வழிபட்டனர். இந்த பூஜை நிறைவு பெற்ற போது கருமேகம் திரண்டு சிறிது நேரம் சாரல் மழை பொழிந்ததால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : Manur Periyakulam Madai , Nellai: A rain offering ceremony was held at Manur Periyakulam Madai near Nellai to welcome the northeast monsoon.
× RELATED வடகிழக்கு பருவமழையை வரவேற்கும்...