×

போலீஸ் ரோந்து வாகனம் அருகில் நின்றபடி பட்டா கத்தியுடன் வீடியோ வெளியீடு; பல்லாவரம் அருகே வாலிபர் கைது

பல்லாவரம்: பகுதி மக்களை அச்சுறுத்துவதற்காக  போலீஸ் ரோந்து வாகனம்  அருகில் நின்றபடி  பெரிய அளவிலான பட்டாக்கத்தி யுடன் நிற்பதுபோன்று வீடியோ பதிவு செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்ட  வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்க அரசு. நிலம் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (22). படிக்கும் வயதில் ஒழுங்காக படிக்காமலும், வேலைக்கு செல்லாமலும் ஊர் சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இவரை தனது பகுதியை சேர்ந்த  நண்பர்கள் யாரும் மதிக்கவில்லையாம். ஒல்லியாக இருப்பதால்தான் தன்னை யாரும் மதிக்கவில்லை. எப்படியாவது பெரிய ரவுடியாக வலம் வரவேண்டும். அப்போதுதான் ஊரே தன்னை பார்த்து நடுங்கும் என கோபால கிருஷ்ணன் நினைத்துள்ளார்.

இதற்காக என்ன செய்யலாம் என்று நினைத்தபோது, விபரீத எண்ணம் ஏற்பட்டது. போலீசார் ரோந்து செல்லும் இடங்களை நோட்டமிட துவங்கியுள்ளார். போலீசார் அசந்திருந்த நேரத்தில்  ரோந்து வாகனம் அருகே நின்றவாறு பல கோணங்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து வைத்துகொண்டார். இந்நிலையில், நேற்று அவருக்கு பிறந்த நாள் வந்தது. அப்போது தான் யாரென்று காட்டவேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருதிய கோபாலகிருஷ்ணன், ஏற்கனவே போலீஸ் வாகனம் அருகில் நின்று எடுத்து வைத்திருந்த வீடியோவுடன் இணைத்து, கையில் பெரிய அளவிலான பட்டா கத்தியை பிடித்து நிற்பது போன்ற வீடியோவை  இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இவர் பதிவிட்ட வீடியோவை பார்த்து பகுதி மக்கள் பயந்தார்களோ இல்லையோ, சங்கர்நகர் போலீசார் கோபமடைந்தனர்.

தங்களுக்கே தெரியாமல் தங்களது போலீஸ் வாகனம் அருகில் நின்றவாறு பட்டாக்கத்தியுடன் வீடியோ பதிவிட்ட வாலிபர் கோபாலகிருஷ்ணனை தேடி அவரது வீட்டுக்கு விரைந்தனர். அப்போது எதுவும் நடக்காததுபோல் வீட்டில் இருந்த கோபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும்  பெரிய அளவிலான பட்டா கத்தி இவருக்கு எங்கிருந்து கிடைத்தது. வீடியோவை வெளியிட்டதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டாக்கத்தியுடன் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடும் கலாசாரம் இளைஞர்களின் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது போன்ற நபர்கள் மீது போலீசார் தயவுதாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள்  அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pallavaram , Video release of police patrol vehicle standing nearby with belt knife; Youth arrested near Pallavaram
× RELATED பல்லாவரம் அருகே மதுபோதை தகராறு:...