×

பால், கலப்பின பசு உற்பத்தியை அதிகரிக்க ரூ.47.50 கோடியில் பாலினம் பிரிப்பு ஆய்வகம்-மாவட்ட கால்நடை பண்ணையில் அமைகிறது

ஊட்டி :  பால், கலப்பின பசுக்கள் உற்பத்தியை அதிகரிக்க கிடாரி (பெண்) கன்றுகள் மட்டுமே தேவைப்படுவதால் ஊட்டியில் ரூ.47.50 கோடியில், விந்தணுக்களில் பாலினம் பிரிப்பு ஆய்வகம் அமைக்கும் பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம், ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் அரசின் கால்நடை பராமரிப்புத்துறை கட்டுப்பாட்டில் மாவட்ட கால்நடை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இப்பண்ணை மொத்தம் 129.38 ஏக்கர் பரப்பில் உள்ளது. இங்கு உயர் மரபுத்திறன் கொண்ட ஜெர்சி, கலப்பின ஜெர்சி, பிரிசியன் மற்றும் பிரிசியன் கலப்பினம் என மொத்தம் 85 பொலி காளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த பொலி காளைகளுக்கு தேவையான தீவனம் இப்பண்ணை வளாகத்திலேயே தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உயரினம் மற்றும் கலப்பின உறை விந்து குச்சிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொலி காளைகளிடம் இருந்து தரமான முறையில் உறைவிந்து குச்சிகள் உற்பத்தி செய்யப்பட்டு கால்நடை வளர்ப்போர் பயன்படும் வகையில் கால்நடைத்துறை மூலம் செயற்கை முறை கருவூட்டல் மேற்கொள்ளும் வகையில் வழங்கப்படுகிறது.

இப்பண்ணையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தில் 25 பொலி காளைகளை பராமரிக்கும் வகையில் ரூ.1.86 கோடி மதிப்பில் புதிய பொலி காளை கொட்டகை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பால் உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதனை கவனத்தில் கொண்டு, கலப்பின பசுக்கள் உற்பத்தியை தேவைக்கேற்ப அதிகரித்தாக வேண்டியுள்ளது.  இதற்கு இனப்பெருக்கத்தின் மூலம் கிடாரி (பெண்) கன்றுகள் மட்டுமே அதிகமாக தேவைப்படுகிறது. இதற்கு ஏற்ப ஊட்டியில், மாவட்ட கால்நடை பண்ணையில் விந்தணுவில் பாலினம் பிரிக்கும் ஆய்வகம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.47.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, முதற்கட்டமாக பாலினம் பிரிக்கும் இயங்கும் ஆய்வகத்தை கட்டமைக்க ஏதுவாக மேற்கூரையுடன் கூடிய கான்கீரிட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் நிறைவடைந்தவுடன் ஆய்வகம் அமைக்கப்பட்டு அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கருத்தரிக்கும் நிலையிலேயே கிடாரி கன்றுகள் பிறப்பதை உறுதி செய்தல், காளை கன்றுகள் பிறப்பு மற்றும் பராமரிப்பில் ஏற்படும் செலவுகளை தவிர்த்தல், கலப்பின கிடாரி கன்றுகளின் எண்ணிக்கையை அதிகரித்து பால் உற்பத்தியை பெருக்குதல் மற்றும் விவசாயிகளுக்கு தேவையற்ற செலவுகளை தவிர்த்தல், இதன்மூலம், பால் உற்பத்தியை தற்போதுள்ள அளவுக்கு மேல் 50 சதவீதம் அதிகரிக்க செய்தல், விவசாயிகளின் வருமானம் மற்றும் லாபத்தை அதிகரிக்க செய்தல், இதன் மூலம் புதியதாக கால்நடை வளர்போரை ஊக்குவித்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பகவத் சிங் கூறுகையில்,‘‘ஊட்டியில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் பாலினம் பிரிக்கும் ஆய்வகம் அமைய உள்ளது. பொலி காளைகளிடம் இருந்து சேகரிக்கப்படும் விந்தணுக்களை ஆய்வகம் மூலம் ஆய்வு செய்து கிடாரி கன்று பிறக்கும் வகையில் பிரிக்கப்படும். அதனை பயன்படுத்தி பசுக்களுக்கு சினை ஊசி போடப்படும். இந்த ஆய்வகம் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.

Tags : Gender Separation Laborator-District Cattle Ranch , Ooty : At Rs 47.50 crore in Ooty, gender in semen, as only Kitari (female) calves are required to increase production of milk, crossbred cows.
× RELATED காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு: 30 பேருக்கு காவல்துறை சம்மன்