×

புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி பர்வத மலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்-கோயிலில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம்

கலசபாக்கம் : திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வத மலை மீது சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலாம்பிகை சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் பவுர்ணமி நாளில் சுவாமி தரிசனம் செய்ய, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் அபிஷேக பொருட்கள் மூலம் சுவாமிக்கு தங்களது கையாலேயே அபிஷேகம் செய்யலாம்.

இந்நிலையில், புரட்டாசி மாதம் பவுர்ணமி முன்னிட்டு நேற்று அதிகாலை கோயில்மாதி மங்கலத்தில் உள்ள கரை கண்டேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கடலாடி, பட்டியந்தல், வேடப்புலி, வெள்ளம்தாங்கி ஈஸ்வரர், வடகாளியம்மன் கோயில் வழியாக சுமார் 23 கிலோ மீட்டர் பர்வதமலை கிரிவலம் சென்றனர். பின்னர், மலை அடிவாரத்தில் உள்ள வீரபத்திரர் சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் தங்களது கைகளில் சக்தி கயிறு கட்டிக்கொண்டு பர்வத மலை உச்சிக்கு சென்று, பாலாம்பிகை சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகரித்து இருந்ததால் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் மற்றும் வனத்துறையினர் மலையேறும் பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் எடுத்து செல்கிறார்களா என சோதனை செய்தனர்.
நேற்று விடுமுறை நாள் என்பதாலும் ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் வந்தால் கடன் தீரும் என்பதாலும் பக்தர்கள் ஆர்வத்துடன் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று பர்வத மலையை சுற்றி தொண்டு நிறுவனங்கள் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் ஒட்டு மொத்த தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

Tags : Puratasi ,Parvatha hill ,Krivalam , Kalasapakkam : About 2,000 years old on the 4,560 feet Parvatha hill near Kalasapakkam, Thiruvannamalai district.
× RELATED 4560 அடி உயரமுள்ள பர்வத மலையில் இன்று...