×

திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு சரக்கு ரயிலில் சென்ற 3,700 டன் பச்சரிசி: தர்மபுரியில் இருந்து 10 ஆண்டுக்கு பின் அனுப்பப்பட்டது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, கடந்த 10 ஆண்டிற்கு பிறகு திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டத்திற்கு 3,700 டன் பச்சரிசி, சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி உட்பட பல்வேறு மாவட்டங்களில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் சுமார் 50 லட்சம் டன் நெல் அரைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் அளே தர்மபுரி, எஸ்.கொட்டாவூர், வேடியப்பன்திட்டு, மதிகோன்பாளையம், பாப்பாரப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில், 70 நெல் அரவை ஆலைகள் உள்ளன.

இந்த ஆலைகள் மூலம் பணியாளர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், டிரைவர்கள், கிளீனர்கள் என 2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கிறது. தர்மபுரியில் போதிய அளவில் நெல் சாகுபடி பரப்பு இல்லாததால், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகமே நெல் கொள்முதல் செய்து, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் நெல் அரவை ஆலைகளுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆலைகள் அரவை செய்து, அரிசி உற்பத்தி செய்து, தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திடம் வழங்குகிறது.
 
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்படுகிறது. இதுதான் இதுநாள் வரை வழக்கத்தில் இருந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், வெளிமாவட்டத்திற்கு தேவையான அரிசியை, தர்மபுரி மாவட்ட நெல் அரவை ஆலைகளில் அரவை செய்து அனுப்பப்படுகிறது. அதற்கான நெல் டெல்டா மாவட்டங்களில் இருந்து பெறப்படுகிறது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆலைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, திண்டுக்கல் மாவட்டத்துக்கு கடந்த மாதம், 1,250 டன் ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று, தர்மபுரி ரயில் நிலையத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு 1,240 டன் பச்சரிசி, கோவை வடக்கு மாவட்டத்திற்கு 1,210 டன் பச்சரிசி, மொத்தம் 42 வேகனில் அனுப்பி வைக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில்,  வழக்கமாக 7 ஆயிரம் ஹெக்டரில் நெல் சாகுபடி செய்யப்படும். நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக பெய்துள்ளதால், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை, 10,177 ஹெக்டரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில பச்சரிசி அரவை முகவர்கள் நலச்சங்க பொதுச் செயலாளர் பாஸ்கர் கூறுகையில், ‘தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளுர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பச்சரிசி, சாப்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 70 நெல் அரவை ஆலைகள் உள்ளன. டெல்டா மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்து, அரவை ஆலைகளிடம் வழங்குகிறது. 100 கிலோ நெல்லுக்கு 65 கிலோ அரிசி கிடைக்கும். தற்போது, தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பச்சரிசி தேவையான மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 6 மாதமாக அரிசி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அனுப்பி வைக்கப்படும் பச்சரிசி ஏ கிரேடு அந்தஸ்து பெற்ற சம்பா ரக அரிசி,’ என்றார்.
    
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கடந்த 2 மாதத்தில் திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டத்திற்கு 3,700 டன் பச்சரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்திற்கு தேவையான அரிசி இருப்பு வைத்துக்கொண்டு தான், வெளிமாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டிற்கு பிறகு, தற்போது அரிசி தர்மபுரி மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டத்திற்கு அரசி ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது,’ என்றனர்.

Tags : Bacharisi ,Dindigul ,Coimbatore ,Tirupur ,Dharmapuri , 3,700 tonnes of Bacharisi sent by freight train to Dindigul, Coimbatore, Tirupur districts: Despatch from Dharmapuri after 10 years
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...