×

சூளைமேனி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையமாக மாறிய சமுதாய நலக்கூடம்

ஊத்துக்கோட்டை:  சூளைமேனி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையமாக சமுதாய கூடம் மாறியுள்ளது.  இதனால் இப்பகுதியில் புதிய நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் சூளைமேனி ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம், நிச்சயதார்த்தம், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை பெரியபாளையம், ஊத்துக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு சென்று அங்குள்ள திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதால், அதிக அளவில் வாடகை பணம் கொடுக்க வேண்டியுள்ளது.

எனவே சூளைமேனி பகுதியில் சமுதாய கூடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, கடந்த 2013ம் ஆண்டு சமுதாய கூடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பயன்பெற்றனர். இந்நிலையில், அந்த சமுதாய கூடத்தில் தற்போது அரசின் நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. மேலும், இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு சுற்று வட்டார பகுதிகளான பாலவாக்கம், லட்சிவாக்கம், கீழ் கரமனூர் கண்டிகை, தண்டலம், ஆத்துப்பாக்கம் என 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் சூளைமேனி பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்து, தங்கள் நெல் மூட்டைகளை விற்பனை செய்கிறார்கள்.  

எனவே, இதனால் காதுகுத்து, வளைகாப்பு, மஞ்சள் நீராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்த சமுதாய கூடமின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சூளைமேனி பகுதியில் புதியதாக நெல் கொள்முதல் நிலையம் கட்ட வேண்டும் என்றும் சமுதாய கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று  அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Kullaimeni Village , A community welfare center converted into a paddy procurement station in Chulaimeni village
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...