10-ம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டம்; மாஜி அமைச்சர்கள் 3 பேருடன் எடப்பாடி ரகசிய ஆலோசனை

சேலம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து 3 மாஜி அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி இரவில் ரகசிய ஆலோசனை நடத்தினார். அதிமுகவை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் இருதரப்பினரும் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வரும் 10ம்தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார். கடந்த ஒரு வாரமாக சேலத்தில் முகாமிட்டுள்ள  எடப்பாடி பழனிசாமி நெருங்கிய நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார். அவரை முன்னாள் அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களுமான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் சந்தித்து ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு 3 பேரும் வந்தனர். இரவு 10.30 மணி வரை ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து நிர்வாகிகளிடம் எடப்பாடி பானிசாமி கேட்டு வருகிறார். எந்த காரணத்தைக் கொண்டும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை கட்சியில் சேர்க்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். இவர்கள் உள்ளே வந்தால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். சிறைக்கு செல்வதற்கு முன்பு சசிகலாவுக்கு எடப்பாடி எல்லாமுமாக இருந்தார். சசிகலாதான் நெருக்கடியான நேரத்தில் கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமித்தார். அதன்பிறகு காட்சிகள் மாறிய நிலையில், சசிகலாவை முற்றிலும் புறக்கணித்துவிட்டார். இந்நிலையில் அவரை கட்சியில் சேர்க்கும் பட்சத்தில் நிர்வாகிகளை அவரது பக்கம் கொண்டு சென்றுவிடுவார்.

இதனால் கட்சியில் தனது செல்வாக்கு முற்றிலும் சரிந்துவிடும். அதேபோல கட்சிக்காக உழைக்காத ஓ.பன்னீர்செல்வத்தை 100 சதவீதம் சேர்க்க மாட்டோம் என்று கூறிவிட்டார். கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை வேலுமணியும், விழுப்புரத்தை பொறுத்தவரை சண்முகமும், தர்மபுரியில் கே.பி.அன்பழகனும் முக்கியமானவர்கள். இவர்கள்தான் எடப்பாடி பழனிசாமியை இயக்குகிறார்கள் என்ற பேச்சும் இருந்து வருகிறது. இந்த ரகசிய சந்திப்பும் அப்படித்தான். கட்சியை முழுமையாக தன் பக்கம் கொண்டு வர  முக்கிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி கைக்குள் வைத்து செயல்படுகிறார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேச வேண்டிய அஜண்டா குறித்தும் மூவரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இவர்களின் சொந்த கருத்தையும் அவரிடம் திணித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: