×

வில் அம்பு கேட்கும் ஷிண்டே தேர்தல் ஆணையம் கெடு உத்தவ் எக்ஸ்பிரஸ் பதில்

மும்பை: சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை ஷிண்டே அணிக்கு ஒதுக்குவது தொடர்பாக இன்றைக்குள் பதில் அளிக்கும்படி உத்தவ்  தாக்கரேவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில், நேற்றே அவர் தனது பதிலை அனுப்பினார். மகாராஷ்டிராவில் சிவசேனா உடைக்கப்பட்டு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியும், உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகின்றன. தங்கள் அணிதான் உண்மையான சிவசேனா என்று அறிவிக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் இருதரப்பினரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். அது நிலையில் இருக்கும் நிலையில், கட்சியின் பெரும்பான்மை எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் தனது பக்கம் இருப்பதால், சிவசேனாவின் வில், அம்பு சின்னத்தை தனது அணிக்கு ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் ஷிண்டே கோரியுள்ளார். இதற்கான கடிதத்தை அதனிடம் அளித்துள்ளார்.

இதற்கு, இன்று 2 மணிக்குள் பதில் அளிக்கும்படி உத்தவ் தாக்கரேவுக்கு தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் உத்தவ் தாக்கரே நேற்றே தனது பதிலை எக்ஸ்பிரஸ் வேகத்தில் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினார். அதில், ‘ஏக்நாத் ஷிண்டே அணியினர் தாங்களாகவே சிவசேனா கட்சியில் இருந்து விலகிச் சென்று விட்டனர். இதனால், கட்சியின் வில் அம்பு சின்னத்துக்கு அவர்கள் உரிமை கோர முடியாது,’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘அந்தேரி கிழக்கு சட்டபேரவை தொகுதிக்கு நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. எனவே, வில் அம்பு சின்னம் குறித்து விரைவாக முடிவு எடுத்து, அதை தங்கள் அணிக்கு ஒதுக்க வேண்டும்,’ என்று தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள கடிதத்தில் ஷிண்டே அணி குறிப்பிட்டுள்ளது.

Tags : Shinde Election Commission ,Ketu Uddhav , Shinde Election Commission Ketu Uddhav Express Answer Asking Bow Arrow
× RELATED 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க...