×

2-வது முறையாக போட்டியின்றி திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்வாகின்றனர்

சென்னை: திமுக தலைவராக 2வது முறையாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். இதுபோல, பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோரும் தேர்வாகின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை நடைபெறும் திமுக பொதுக்குழுவில் வெளியாகிறது. திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு முதல்கட்டமாக கிளை கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தொடர்ந்து பேரூர், மாநகர வட்ட தேர்தல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஒன்றிய, நகர, மாநகர பகுதிகளுக்கான தேர்தலும், பின்னர் மாநகர கழகங்களுக்கான தேர்தலும் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்தது. இதில் திமுகவில் கட்சி ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 64 மாவட்ட செயலாளர்கள் மீண்டும் அதே பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

7 மாவட்டச் செயலாளர்கள் மட்டும் புதியவர்கள். தென்காசி வடக்கு மாவட்ட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. பொது தேர்தலின் இறுதிகட்டமாக திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) திமுக பொதுக்குழு கூடுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது. இதில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 4 தணிக்கை குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தலைவர், பொது செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறவர்களிடம் இருந்து அக்ேடாபர் 7ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் வாங்கப்படும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்தது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பதவிகளுக்கு போட்டியிடுவோர்களை பொதுக்குழு உறுப்பினர்கள் (தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உள்பட) 5 பேர் முன்மொழிய, 5 பேர் வழி மொழிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று வேட்புமனு தாக்கல் நடந்தது. தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என போட்டி போட்டு கொண்டு விருப்ப மனுக்களை அளித்தனர். அதேபோல், பொது செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோர் சார்பிலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கிடையில் தலைவர் பதவிக்கு போட்டியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் பிற்பகல் 12.11 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்திற்கு வந்தார். அங்கு தனது வேட்புமனுவை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் அளித்தார். வேட்புமனு தாக்கலின் போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஆவடி நாசர் உள்ளிட்ட அமைச்சர்கள், கனிமொழி உள்ளிட்ட அனைத்து எம்பிக்கள், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதே போல பொது செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டிஆர்.பாலு ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். கலைஞர் அரங்கத்தில் இருந்து அண்ணா அறிவாலயத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு  மு.க.ஸ்டாலின் நடந்து செல்லும்போது,  அவருக்கு இருபுறமும் தொண்டர்கள் கூடியிருந்து வாழ்த்து தெரிவித்தனர்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு  தாக்கல் செய்வதற்கு முன்பாக சென்னை  மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர்  நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது திமுக முக்கிய  நிர்வாகிகள் உடனிருந்தனர். அதே நேரத்தில் நாளை திமுக பொதுக்குழு  கூட்டம் நடைபெற உள்ளதால் திமுக தொண்டர்கள் சென்னையை நோக்கி வந்த வண்ணம்  உள்ளனர். இதனால், சென்னை அண்ணா அறிவாலயம் தொண்டர்களால் நிரம்பி வழிந்து  வருகிறது. இதற்கிடையில் காலை 10 மணிக்கு தொடங்கிய வேட்புமனு தாக்கல் மாலை 5 மணி வரை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

இதில் தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பொது செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு தவிர வேறு யாரும் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்யவில்லை. இதை தொடர்ந்து திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக போட்டியின்றி தேர்வாகிறார். மேலும், பொது செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் தேர்வாகின்றனர். திமுக தலைவராக 2018ம் ஆண்டு ஆகஸ்ட்  28ம் தேதி மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இரண்டாவது முறையாக  அவர் போட்டியின்றி தலைவராக தேர்வாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுக்குழுவில் தலைவர், பொது செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்கள், துணை பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவர். பொதுக்குழுவில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

Tags : Duraimurugan ,DMK ,M.K.Stalin ,general secretary ,TR.Palu ,treasurer , Duraimurugan becomes the DMK president unopposed for the 2nd term, M. K. Stalin is elected as the general secretary, DR. Balu is elected as the treasurer.
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...