மதுரை: பாஞ்சாகுளம் தீண்டாமை வழக்கில் 3 பேருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்த நிலையில், பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் கிரிக்கெட் விளையாடியபோது, இருதரப்பினரிடையே கடந்த 2020ல் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக பலர் மீது கரிவலம் வந்தநல்லூர் போலீசார் வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த மாதம் பாஞ்சாகுளத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சிறுவர்கள் சிலர் தின்பண்டங்கள் வாங்கச் சென்றனர். அப்போது அவர்களிடம் ஊர்க்கட்டுப்பாடு காரணமாக தின்பண்டம் வாங்க வரக்கூடாது. வீட்டில் போய் சொல்லுங்கள் என கூறிய கடைக்காரர், சிறுவர்களுக்கு தின்பண்டம் தர மறுத்தார். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார், பெட்டிக்கடை உரிமையாளர் மகேஸ்வரன் (40), ராமச்சந்திரன் (22), இவரது தாய் சுதா (எ) மாரியம்மாள் ஆகியோரை கைது செய்தனர். முருகன் தலைமறைவாக உள்ளார். இந்த வழக்கில் இவர்களது ஜாமீன் மனு ெநல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தள்ளுபடியானது.
இதையடுத்து இவர்கள் தங்களுக்கு ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இதேபோல் முருகன் தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய தயாராக உள்ளதாகவும், அதை ஏற்குமாறு உத்தரவிட கோரியும் ஒரு மனு செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு கூடுதல் வக்கீல் நம்பிசெல்வன் ஆஜராகி, ‘‘மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு தீவிரமானது. ஏற்கனவே விசாரணை நீதிமன்றம் இவர்களது மனுவை தள்ளுபடி செய்ததுடன், 6 மாதத்திற்கு ஊருக்குள் நுழையக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதே நேரம் புகார்தாரரின் கருத்தை அறியாமல் ஜாமீன் வழங்கக் கூடாது. அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் ெசய்ய அவகாசம் வேண்டும்’’ என்றார்.
பாதிக்கப்பட்டோர் தரப்பில் வக்கீல் பொன்ராஜ் ஆஜராகி, ‘‘பாஞ்சாகுளத்தில் இன்னும் புறக்கணிப்பு தொடர்கிறது. பாதிக்கப்பட்டோருக்கு அச்சுறுத்தல் உள்ளது. ஜாமீன் வழங்கக் கூடாது என்ற எங்களது இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும்’’ என்றார்.இதையடுத்து நீதிபதி, ஜாமீன் மனுவிற்கு பதிலளிக்க அவகாசம் அளித்து விசாரணையை அக்.12க்கு தள்ளி வைத்தார்.
அதே நேரம் தலைமறைவான முருகன் சரணடைவதை விசாரணை நீதிமன்றம் ஏற்று, அவரது மனு மீது முன்னுரிமை அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கின் விசாரணைக்காக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்டோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.