×

மூளைச்சாவு அடைந்தவர்களிடம் தானமாக பெற்று 135 பேருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை: ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் தகவல்

தண்டையார்பேட்டை: மூளைச்சாவு அடைந்தவர்களிடம் தானமாக பெற்று 135 பேருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனையில் சென்னை மட்டுளின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து  ஏராளமானோர்  சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். பல்வேறு துறைகளுடன் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுகின்றனர். இங்கு, நடப்பு ஆண்டில் மட்டும் 27 சிறுநீரக மாற்று அறுவை  சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 19 பேர் தங்களது உறவினர்களுக்கு தானமாக ஒரு  சிறுநீரகத்தை அளித்ததன் அடிப்படையில் உறுப்பு மாற்று சிகிச்சைகளை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜி கூறியதாவது: ஸ்டான்லி அரசு மருத்துவமனையை பொறுத்தவரை உறுப்பு மாற்று சிகிச்சைகள்  தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூளைச்சாவு அடைந்த  நபர்களிடம் இருந்து மட்டும் இதுவரை 135 சிறுநீரகங்கள் தானமாகப் பெறப்பட்டு,  தகுதியானவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன. இதனிடையே, கடந்த ஆகஸ்ட்  மாதத்தில் விபத்தில் சிக்கிய 59 வயது கூலித் தொழிலாளி ஒருவர் உயர்  சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை  பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரின்  ஒப்புதலுடன் இரு சிறுநீரகங்கள், கல்லீரல், தோல் ஆகியவை தானமாகப்  பெறப்பட்டன. அதில் ஒரு சிறுநீரகம் 33 வயதான நபர் ஒருவருக்கு  பொருத்தப்பட்டது. அந்த கூலி தொழிலாளியின் உறுப்புகளான இரைப்பை, குடல்  ஆகியவைகளும் மருத்துவமனை குழுவினரால் எடுக்கப்பட்டது.

இவ்வாறாக, நடப்பு  ஆண்டில் மட்டும் நோயாளிகளின் உறவினர்கள், மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து  27 சிறுநீரகங்கள் பெறப்பட்டு, அவை உரிய நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளன.  அவர்கள் அனைவரும் தற்போது நலமுடன் உள்ளனர். இதுதவிர, 10.8.2022 அன்று  மூளைச்சாவு அடைந்த 20 வயது இளைஞர் ஒருவரின் கல்லீரல் தானமாகப் பெறப்பட்டு  ஸ்டான்லி மருத்துவர்களால் 43 வயதுடைய நபருக்கு பொருத்தப்பட்டு அவருக்கு  மறுவாழ்வு அளிக்கப்பட்டது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இதுவரை 135  சிறுநீரகங்கள், மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்பட்டு மாற்று  அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.  இதில் இந்த ஆண்டு மட்டும் 4 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை  செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும்  முதன்மைச் செயலாளர் தலைமையில் அனைத்து மருத்துவ கல்லூரி முதல்வர்களுடன்  கோவையில் நடைபெற்ற கலந்துரையாடலில் உறுப்பு தானம் குறித்து பொதுமக்கள்  விழிப்புணர்வு பெற வேண்டியதன் அவசியமும், மூளைச் சாவால் இறந்தோரின்  குடும்பத்தினரை உறுப்பு தானத்திற்கு ஊக்குவித்து அவற்றை நோயினால்  அவதிப்படுவோருக்கு பொருத்துவதால் இறந்தோர் மறுவாழ்வு பெறுகின்றனர் என்றும்  எடுத்துரைக்கப்பட்டது. விபத்தில் பாதிக்கப்பட்டு மூளைசாவு  அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவர்களது உறவினர்கள் முன்வர வேண்டும். இதன்மூலம் உறுப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு அவை பொருத்தப்பட்டு, அந்த குடும்பங்களும் மகிழ்ச்சி பெறும்  என்பதை எண்ணி செயல்பட வேண்டும். இவ்வாறு டாக்டர் பாலாஜி கூறினார். இதையடுத்து, ஒரே  ஆண்டில் அதிக அளவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர்  பிரகாஷ், டாக்டர் திருவருள் ஆகியோரை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர்டாக்டர் பாலாஜி பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.


Tags : Stanley Government Hospital ,Info , 135 kidney transplants received from brain dead patients: Stanley Government Hospital Dean informs
× RELATED இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே...