×

ஏனாத்தூர் புறவழிச்சாலையில் பால தடுப்புச்சுவரை நீட்டிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: விபத்தை தடுக்கும் வகையில் ஏனாத்தூர் புறவழிச்சாலையில் பால தடுப்புச்சுவரை நீட்டித்து அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் ஏனாத்தூர் புறவழிச்சாலை 6 கிமீ நீளம் கொண்டது. சென்னையில் இருந்து சுங்குவார்சத்திரம் வழியாக காஞ்சிபுரம் வரும் வாகனங்கள், பொன்னேரிக்கரை, புதிய ரயில் நிலையம் வழியாக சுற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நகருக்குள் செல்வதை தவிர்க்கும் வகையில், ஏனாத்தூர் புறவழிச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் காஞ்சிபுரத்தில் இருந்து சங்கரா பல்கலைக்கழகம், சங்கரா கலை அறிவியல் கல்லூரி மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளுடன் இப்பகுதி வளர்ந்து வரும் பகுதியாகும். இந்த சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி மாணவர்கள் மேற்கண்ட சாலையை கடந்துதான் செல்லவேண்டும். புறவழிச்சாலையின் அகலம் மிகவும் குறைவாக இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் 5.5 மீட்டர் அகலம் கொண்ட சாலை, 7 மீட்டர் அகலத்துக்கு விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. ஆனால், கோனேரிகுப்பத்தில் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு கூடம் எதிரே மேற்கண்ட சாலையில், சிறு பாலத்தின் தடுப்புச்சுவர் நீளம் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எதிரே வரும் கனரக வாகனத்துக்கு வழிவிட ஒதுங்கும்போது பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சிறு பாலத்தின் தடுப்புச்சுவரை நீட்டித்து  அமைக்கவேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Enathur , Public demand for extension of bridge barrier on Enathur Bypass
× RELATED சங்கரா பல்கலையில் ரத்த தான முகாம்