×

பிரியாணி, ஷூ கடைகளுக்கு வருபவர்கள் நிறுத்துகின்றனர்: கார் பார்க்கிங் சென்டராக மாறிய தேசிய நெடுஞ்சாலை

* ஆம்பூர் சுற்றுப்பகுதிகளில் விபத்து அபாயம்
* கடும் நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கை

ஆம்பூர்: ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரியாணி, ஷூ கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் நிறுத்தி செல்லும் கார்களால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு அபாயம் தொடர்கதையாகி வருகிறது. எனவே விதிமீறி வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிலையத்தில் இருந்து ஓஏஆர் சிக்னல் செல்லும் வழியில் போதை டிரைவரால் கன்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பள்ளி செல்ல தனது தந்தையுடன் பைக்கில் சென்ற இரு மாணவிகள் உயிரிழந்தனர்.

உயிரிழந்த அந்த பகுதியில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா, மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன், நெடுஞ்சாலை திட்ட மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உரிய தடுப்பு பணிகள் மேற்கொண்டு விபத்துக்களை தவிர்க்க அறிவுறுத்தி சென்றனர். தற்போது ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளான மேம்பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. சாலையின் நடுவே மேம்பால தூண்களுக்கான கட்டுமான பணிகள் ராஜிவ்காந்தி சிக்னல் பகுதியில் துவங்கி நடந்து வருகிறது. இந்த கட்டுமான பணிகள் ஆம்பூர் நகர பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து நடக்க உள்ளது.

இதற்காக இந்த சாலையில் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அகற்றப்பட்டு புதிய கால்வாய் கட்டும்பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக சில இடங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு இரு, மூன்று சக்கர வாகன ஒட்டிகள், ஆம்பூரில் இருந்து வெளியே செல்லும் இலகு, கனரக வாகனங்கள் மெயின் சாலையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், தற்போது இந்த சாலையில் போக்குவரத்து விதிகளை மீறி வெளி மாநிலம், வெளியூர்களில் இருந்து கார்கள், வேன்களில் வரும் பலர் தங்களது வாகனங்களை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி செல்கின்றனர்.

எனவே அதிவேகமாக வரும் வாகனங்கள் இவ்வாறு நிறுத்தி செல்லும் வாகனங்கள் மீதோ அல்லது இந்த வாகனங்களை கடந்து தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் இதர வாகன ஓட்டிகள் மீதோ மோதும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,  பிரியாணி , ஷூ கடைக்கு வரும் கார்கள் வரிசையாக தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு நிறுத்தபட்டு திடீரென திறக்கப்படும் கார் கதவுகளால் சாலையில் வரும்வாகன ஓட்டிகள் விபத்து ஏற்பட்டு அவதி படும் சூழல் உருவாகி உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டால் ஒரு சில நிமிடங்களில் அவற்றை சீர் செய்து சாலையை போக்குவரத்திற்கு தயார் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

ஆனால், இத்தகைய சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களை நெடுஞ்சாலை ரோந்து பணியினர் கண்டும் காணாமல் செல்வது ஏன் என வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகின்றனர். ஆம்பூர் நகரில் தேசிய நெடுஞ்சாலை போடப்பட்ட பின்னர் உரிய மேம்பாலம் இல்லாததால் பலர் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். தற்போது மேம்பால பணிகள் நடந்து வரும் நிலையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை என்எச்ஏஐ அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். சுழற்சி அடிப்படையில் இந்த பகுதிகளில் உரிய ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். அலட்சிய போக்கால் சாலையில் நிறுத்தி செல்லும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்க வழிவகை செய்ய வேண்டும்.

விதிமிறி வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளது. ஆம்பூர் நகரின் மையத்தில் செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையை தினந்தோறும் தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அன்றாட பணிகளுக்காக ஆண், பெண் தொழிலாளர்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட பொதுமக்கள் அன்றாடம் உயிரை கையில் பிடித்தபடி கடக்கின்றனர். இந்த சாலையில் ஏற்படும் விபத்துக்களால் போலீசார், மருத்துவ துறையினர் பலர் தங்களது தூக்கத்தை பல நாட்கள் இழந்து உயிர்களை காக்க போராடியுள்ளனர். இப்போதைய தேவை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

விபத்து கேந்திரமாக மாறி வரும் ஓஏஆர் சிக்னல், ராஜிவ்காந்தி சிக்னல் மற்றும் இவை இரண்டிற்கும் இடைப்பட்ட சாலை ஆக்கிரமிப்பு வாகனங்கள் தவிர்ப்பது அவசியம். ஒவ்வொரு  உயிரும் விலைமதிப்பற்றது. அந்த இன்னுயிர்களை காக்க பலர் அன்றாடம் பாடுபடும் வேளையில் ஒரு சிலரின் பொறுப்பற்ற தனத்தால் உயிரிழப்பால் ஒரு குடும்பத்தின் கனவை சிதைத்தல் நியாமாகுமா? ஒரு சிலரின் பலனுக்காக பொதுமக்கள் அச்சத்தில் பயணிக்க வேண்டுமா? என பலரது கேள்வியாக உள்ளது. எனவே, இதுகுறித்து உரிய திட்டமிட்ட நடவடிக்கையை உரிய அதிகாரிகள் மேற்கொண்டு தீர்வுகளை வழங்கிட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

பார்க்கிங் வாகனங்களை கண்டு கொள்ளாத நெடுஞ்சாலைதுறையினர்
வாகன ஓட்டி ஒருவர் தெரிவிக்கையில், ‘விபத்தை ஏற்படுத்தும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்கள் மீது அபராதம், பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த 2019 ஆண்டு கடுமையான விதிகளை பின்பற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், கிருஷ்ணகிரி, வாலாஜா இடையேயான நெடுஞ்சாலையை நிர்வகிக்கும் பணியாளர்கள் இந்த வித வாகன பார்க்கிங்கை கண்டு கொள்வதில்லை.

ஒரு வாகனம் சாலையோரத்தில் நின்றால் அங்கு அவர்களுக்கு உரிய உதவி ஏதேனும் தேவையா? விபத்தில் சிக்கி உள்ளார்களா? மருத்துவ உதவி தேவைப்படுகிறதா என நெடுஞ்சாலைதுறை ரோந்து வாகனத்தினர் ரோந்தின்போது கண்காணிக்க வேண்டும். ஆனால், இந்த ரோந்து வாகனத்தினர் ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான வகையில் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. உரிய அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையிலும் இவர்கள் மெத்தன போக்கை கடைபிடிப்பதே விபத்திற்கு வழி வகுக்கிறது என தெரிவித்தார். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது’ என்றார்.

நோ பார்க்கிங் போர்டுகள் அமைக்க வேண்டும்
தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகள் இத்தகைய பார்க்கிங் கார்களால் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். பிரியாணி, ஷூ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் உரிய கடைகளுக்கான பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்துவதில்லை. அந்தந்த கடை உரிமையாளர்கள் உரிய பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தருவதை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நோ பார்க்கிங் பகுதியாக அறிவித்து விழிப்புணர்வு போர்டுகளை அமைக்க வேண்டும். அதுமட்டுமன்றி இவ்வாறு நிறுத்தபடும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் கண்காணித்து உடன் அங்கிருந்து அனுப்பவோ, தவறுவோர் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவே வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Biryani , Visitors to biryani, shoe shops stop: National highway turned into car parking center
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!