×

2வது சீசன் களைகட்டியுள்ள நிலையில் ஊட்டி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்

ஊட்டி: இரண்டாவது சீசன் களைகட்டியுள்ள நிலையில் ஊட்டி மலை ரயிலில்  பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவதால் ஊட்டி ரயில் நிலையத்தில்  கூட்டம் அலைமோதுகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக  விளங்கி வருகிறது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும்  நூற்றாண்டு பழைமை வாய்ந்த மலை ரயில் உலக பிரசித்தி பெற்றதாகும். யுனஸ்கோ  அமைப்பு நீலகிரி மலை ரயிலை பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

இந்த மலை  ரயிலில் பயணிக்க பிற மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, பல்வேறு  வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஆர்வம்  காட்டுகின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கடைபிடிக்கப்படும் கோடை  சீசன், செப்டம்பர் அக்டோர் மாதங்களில் கடைபிடிக்கப்படும்  2 வது சீசனின்போது சுற்றுலா பயணிகள் அதிகளவு ஊட்டிக்கு வருவது வழக்கம்.

அவ்வாறு வர கூடிய  சுற்றுலா பயணிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்து ஊட்டி மலை ரயிலில்  பயணித்து இயற்கை காட்சிகளை பார்வையிட்டு மகிழ்வார்கள். ஊட்டி - குன்னூர் -  மேட்டுப்பாளையம் இடையேயும், குன்னூர் - ஊட்டி இடையேயும் நாள்தோறும் மலை ரயில்  இயக்கப்படுகிறது. ஊட்டியில் 2வது சீசன் துவங்கியுள்ள  நிலையில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால்  சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் சமவெளி பகுதிகளில்  இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்த வண்ணம் உள்ளனர்.

இதேபோல் அண்டை  மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்தும் அதிகளவு வருகின்றனர். அவ்வாறு  வர கூடிய சுற்றுலா பயணிகள் மலைரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.  இதனால் மலை ரயிலில் கூட்டம் அலைமோதுகிறது. ஊட்டி - குன்னூர் இடையே  இயக்கப்படும் ரயிலில் பயணிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்  வாங்கி பயணித்தனர். பலரும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி  சென்றனர். மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வரும்  நிலையில், ஊட்டி - கேத்தி இடையேயும், குன்னூர் - ரன்னிமேடு இடையேயும்  சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : 2nd season, Ooty hill train, tourist interest
× RELATED கொடைகானல் மேல்மலை கிராமங்களில் பயங்ககரமான காட்டுத் தீ