×

திருப்பதியில் இன்று 7ம் நாள் பிரம்மோற்சவம்: சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி சூரிய பிரபை வாகனத்தில் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று மாலை 32 அடி உயர தங்க ரதம் மாட வீதிகளில் பவனி வந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
இந்த ரதத்தை பெண்கள் மட்டுமே இழுத்தனர். அப்போது நான்கு மாட வீதிகளில் திரண்டிருந்த பல்லாயிக்கணக்கான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி தரிசனம் செய்தனர். இதையடுத்து நேற்றிரவு உற்சவத்தில் மலையப்பசுவாமி கஜ வாகனத்தில் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான இன்று காலை மலையப்ப சுவாமி 7குதிரைகள் பூட்டிய சூரிய பிரபை வாகனத்தில் மச்ச அவதாரத்தில் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சூரிய பகவனின் பிரத்தி ரூபம் தானே என்னும் விதமாக மலையப்பசுவாமி சூரிய பிரபை வாகனத்தில் பவனி வந்தார். மாட வீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஊர்வலத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிர மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அதேபோல் பல்வேறு சுவாமி வேடமணிந்து பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். பக்தர்கள் திவ்யபிரபந்தம், கீர்த்தனைகள், பஜனைகளை பாடியபடி வீதியுலாவில் கலந்து கொண்டனர்.

மதியம் 1மணியளவில் ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், மஞ்சள், தேன், பன்னீர் உள்பட பல்வேறு பொருட்கள் மூலம் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதையடுத்து உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து இன்றிரவு உற்சவத்தில் மலையப்பசுவாமி சந்திரபிரபை வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

Tags : Brahmmoorsavam ,Tirapathi ,Sawami Vetiula , Brahmotsavam today 7th day in Tirupati: Malayappa Swami Vethiula in Surya Prabai Vahanam
× RELATED திருப்பதியில் 3வது நாள் பிரமோற்சவம்...