×

உளுந்தூர்பேட்டையில் 28 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: சுங்கச்சாவடியில் ஊழியர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்..!!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 28 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அனைத்து வாகனங்களும் இலவசமாக செல்ல நேரிட்டது. உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சியில் சுங்கச்சாவடி உள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மைய பகுதியில் உள்ள சுங்க சாவடியில், தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சுங்கச்சாவடியில் 120க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆள் குறைப்பு நடவடிக்கை காரணமாக முன்னறிப்பு இன்று 28 ஊழியர்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்படுவதாக நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலகத்தின் நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டத்தின் காரணமாக சுங்கச்சாவடிகளின் அனைத்து வசூல் மையங்களின் கதவுகளும் திறக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் இலவசமாக சென்றன.

நேற்று மாலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் சங்கராபுரம் உதயசூரியன், உளுந்தூர்பேட்டை மணி கண்ணன் உள்ளிட்டவர்கள் சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊழியர்கள் யாரையும் பணிநீக்கம் செய்யக்கூடாது என்றும் 28 ஊழியர்களையும் பணியில் மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் 3வது நாளான இன்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் இன்று 3-வது நாளாக கட்டணமின்றி இலவசமாக சென்று வருகிறது. சுங்கச்சாவடி ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம் குறித்து இன்று காலை புதுச்சேரியில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் சிறப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்படுமா? என்பது குறித்தே தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என தெரியவருகிறது. மேலும் சுங்கச்சாவடி ஊழியர்களின் இந்த உள்ளிருப்பு போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Tags : Uilandurpate ,Sunkashawar , Ulundurpet, 28 employees, dismissal, toll booth, sit-in
× RELATED செங்கல்பட்டு அருகே பரனூர்...