×

சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: பார்வதிபுரம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பொன். ராதாகிருஷ்ணன், ஒன்றிய அமைச்சராக இருந்த போது பார்வதிபுரம், மார்த்தாண்டத்தில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இந்த பாலங்கள் வந்த பின், மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. கடந்த 2018ல் பாலங்கள் திறக்கப்பட்டன. பாலத்தை கட்டிய கட்டுமான நிறுவனம் 4 ஆண்டுகள் பராமரித்து வந்தனர். பாலத்தின் பேரிங் பகுதிகள், பாலத்தின் பக்க சுவர்களில் வளர்ந்த புற்கள், செடிகளை அகற்றினர். மழை நீர் வடிகால்கள் போன்றவற்றை கண்காணித்து பராமரித்தனர். அவர்களின் ஒப்பந்த காலம் முடிவடைந்து பாலம் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பாலங்களில் பராமரிப்பு பணிகளோ, ஆய்வோ நடைபெற வில்லை. மேலும், அதிவேகத்தில் ஓவர் லோடுடன் கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு செல்லும் டாரஸ் லாரிகள் செல்வதால் பாலத்தில் சாலைகள் சேதம் அடைந்தன. இதுபோல், ஓவர்லோடு, அதி வேக டாரஸ் லாரிகள் பாலங்களில் திடீரென பிரேக் போடும்போது, அந்த பகுதியில் அழுத்தம் தாங்கமல், பாலங்கள் பழுது ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், மார்த்தாண்டம் மேம்பாலத்தில் திடீர் ஓட்டை விழுந்து வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு, தற்போது பழுது பார்க்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பார்வதிபுரம் மேம்பாலத்திலும், பல பகுதிகளில் தார்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. சாலை பெயர்ந்து உள்ளதால், விபத்து அபாயம் உள்ளது.

சாலை பெயர்ந்த நிலையில் தொடர்ச்சியாக கனரக வாகனங்கள் செல்லும் போது அதிர்வு தன்மைகள் காரணமாக, மார்த்தாண்டம் மேம்பாலத்துக்கு ஏற்பட்ட கதி, பார்வதிபுரம் மேம்பாலத்துக்கு வருமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.  மேலும் இரவு நேரங்களில் இந்த மேம்பாலத்தில் பைக் ரேஸ்கள் நடக்கிறது. இதனால் விபத்துக்களும், உயிர் பலிகளும் ஏற்படும் நிலை உள்ளது. பாலத்தின் போதுமான மின் விளக்கு வசதியும் இல்லை. பார்வதிபுரம் மேம்பாலத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இரவு நேரங்களில் பயணிகள் அதிகளவில், பஸ்சுக்காக காத்து நிற்கிறார்கள். எனவே இது போன்ற பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பார்வதிபுரம் மேம்பாலத்திலும் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை பேட்ஜ் ஒர்க் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Parathipuram ,Nagarko ,Kumari district, ,Radhakrishnan ,Union ,Paradipuram ,Marthananda ,Parathipuram Improvement ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை!