சேத்துப்பட்டு குருசாமி பாலம் அருகே போலீஸ் என கூறி கம்பெனி ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி ரூ29 லட்சம் நூதன கொள்ளை: மர்ம கும்பலை பிடிக்க 2 தனிப்படை

சென்னை: சேத்துப்பட்டு குருசாமி பாலம் அருகே போலீஸ் என கூறி கம்பெனி ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி, ரூ29 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை கைது செய்ய போலீசார் 2 தனிப்படை அமைத்துள்ளனர். சென்னை அண்ணா சாலையில் நசீர் கான் என்பவர் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு சந்தோஷ்குமார் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோர் கடந்த 6 ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு நசீர்கான் சேத்துப்பட்டில் உள்ள தனது நண்பர் முகமது சேக்கிடம் கொடுத்துவிட்டு வரும்படி, ரூ29 லட்சத்தை ஊழியர்கள் சந்தோஷ்குமார் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோரிடம் கொடுத்துள்ளார்.

 அதன்படி இருவரும் பணத்துடன் பைக்கில் புறப்பட்டனர். சேத்துப்பட்டு குருசாமி பாலம் அருகே சென்றபோது, போலீஸ் எனக்கூறி ஒரு கும்பல் வழிமறித்து இருவரிடம் இருந்து பையை சோதனை செய்துள்ளது. அதில், கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. இதுபற்றி விசாரித்தபோது, விவரத்தை கூறியுள்ளனர். உடனே, பணத்திற்கான ஆவணத்தை கேட்டபோது, தங்களிடம் இல்லை என கூறியுள்ளனர். இதனால், காவல் நிலையம் வந்து உரிய ஆவணத்தை காண்பித்துவிட்டு, பணத்தை பெற்றுச் செல்லும்படி கூறிவிட்டு, மர்ம கும்பல் ரூ29 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளது. ஆனால், ஊழியர்கள் சந்தோஷ்குமார் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோர், நீங்கள் எந்த காவல் நிலையம். உங்களது அடையாள அட்டையை காட்டுங்கள், என கேட்டுள்ளனர்.

உடனே, அந்த மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, பணப்பை மற்றும் இருவரின் செல்போன்களை பறித்து கொண்டு தப்பியது. இதுகுறித்து 2 ஊழியர்களும் உரிமையாளர் நசீர்கானுக்கு தகவல் அளித்தனர். பிறகு நசீர்கான் அளித்த ஆலோசனைப்படி 2 ஊழியர்களும் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். அதேநேரம், நசீர்கான் பணம் கொடுத்து அனுப்பும் தகவல் 2 ஊழியர்களை தவிர மற்ற யாருக்கும் தெரியாது.

அப்படி இருக்கும் போது 2 ஊழியர்கள் பணத்தை கொண்டு வருவதை முன்கூட்டியே மர்ம கும்பலுக்கு தெரிந்தது எப்படி, இதனால் பணத்தை கொண்டு ெசன்ற 2 ஊழியர்கள் பணத்தை கொள்ளையடித்து விட்டு நாடகமாடுகிறார்களா என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: