பாம்பு கடித்து மாணவி பலி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை-விக்கிரவாண்டியில் பரபரப்பு

விக்கிரவாண்டி :  விக்கிரவாண்டி அருகே  பாம்பு கடித்து மாணவி உயிரிழந்தார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் இறந்ததாக கூறிய உறவினர்கள், உடலை வாங்க மறுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த தொரவி கணபதிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் மகள் சாருமதி (16). பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். தந்தையை இழந்த சாருமதியை, அவரது தாய் சுகுணா(33 )கூலி வேலை செய்து வளர்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 24ம் தேதி காலை சாருமதி வீட்டின் அருகே உள்ள நிலத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரை பாம்பு கடித்துள்ளது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சாருமதியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர்ந்து 5 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மதியம் உயிரிழந்தார்.இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், கிராம மக்கள் மருத்துவமனை முன்பு திரண்ட

னர். மருத்துவமனையில் அனுமதித்த அன்று காலை முதல் இரவு வரை எவ்வித சிகிச்சையும் அளிக்காமல் இருந்ததாகவும், மாணவி ரத்த வாந்தி எடுத்த பிறகே சிகிச்சையை ஆரம்பித்ததாகவும் புகார் தெரிவித்த உறவினர்கள், உரிய நேரத்தில் சிகிச்சை இல்லாததால் மாணவி இறந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் மற்றும் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: