ரூ.200 கோடி பணமோசடி வழக்கு சிறையில் சுகேஷ் முன்னிலையில் இரண்டு நடிகைளிடம் விசாரணை

புதுடெல்லி: ரூ.200 பணமோசடி வழக்கில் திகார் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் முன்னிலையில் 2 நடிகைகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொழிலதிபர்கள், பிரபலங்களை மிரட்டி ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறையில் உள்ளார். இந்த மோசடியில் சினிமா நட்சத்திங்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இதுவரை பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி, முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளர் பிங்கி இரானி மற்றும் லீபாக் ஷி எல்லவாடி ஆகியோரை டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் நடிகைகள் நிக்கி தம்போலி மற்றும் சோபியா சிங் ஆகியோரை கடந்த சனிக்கிழமையன்று திகார் சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு சுகேஷ் சந்திர சேகர் முன்னிலையில் 2 நடிகைகளிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: திகார் சிறைக்கு 2 நடிகைகளை அழைத்து வந்து சுகேஷ் சந்திர சேகரை சந்திக்க வைத்து விசாரணை நடத்தினோம். அப்போது பணமோசடி தொடர்பாக பல்வேறு தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்தன.

தற்போது மாண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சுகேஷ் சந்திர சேகர் திகாரில் இருக்கும்போது சிறை அதிகாரிகளின் உதவியுடன் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார். திகார் சிறையில் அவர் இருந்தபோது ​​பிரபலங்கள் உட்பட பலர் சொகுசு கார்களில் சந்திரசேகரை சந்திக்க வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் எந்த வித சோதனையும் நடத்தாமல் சிறை அதிகாரிகள் அவரை சந்திக்க அனுமதித்துள்ளனர். சிறையில் அவர் இருந்த அறையில் டிவி, சோபா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருந்துள்ளது. அவர் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். சிறையில் இருக்கும் அறையை அவரது அலுவலகம் போல் மாற்றியுள்ளார். இதற்கு சிறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். அவர் சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவழித்து இந்த சொகுசு வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். சிறையில் அவரை சந்திக்க பல்வேறு நபர்கள் வந்தபோதும் பணமோசடி வழக்கில் தொடர்புடையவர்களை மட்டும் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: