×

தமிழ்நாட்டில் 9 உர சேமிப்பு கிடங்குகளில் திடீர் ஆய்வு விதிக்கு புறம்பாக இருப்பு வைக்கப்பட்ட 3,079 மெ.டன் உரம் விற்பனைக்கு தடை

சென்னை: தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் துறை செயலாளர் சமயமூர்த்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள  6 உர உற்பத்தி நிறுவனங்களின் 9 உர சேமிப்பு கிடங்குகள் மற்றும் மொத்த உர விற்பனை கடைகளில் சென்னை வேளாண்மை துணை இயக்குனர் (உரம்) மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த 22ம் தேதி திடீர் ஆய்வு  மேற்கொண்டனர். விருத்தாசலத்தில் இரண்டு மொத்த உர விற்பனை கடைகளில் ஆய்வுகள் மேற்கொண்டபோது வேப்பம் புண்ணாக்கு ஜிங்க் சல்பேட் மற்றும் சர்க்கரை ஆலைக்கழிவில் இருந்து பெறப்படும் பொட்டாஷ் ஆகிய உர வகைகளின் புத்தக இருப்பிற்கும், உண்மை இருப்பிற்கும் வித்தியாசங்கள் இருப்பது கண்டறியப்பட்டது இருப்பில் இருந்த 95.730 மெ.டன் உரங்களுக்கு விற்பனை தடை வழங்கப்பட்டது.

மேலும், உரக்கட்டுப்பாட்டு ஆணைக்கு புறம்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ள காம்ப்ளக்ஸ், டிஏபி, பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட், அம்மோனியம் சல்பேட் மற்றும் ராக் பாஸ்பேட் உரங்கள் இருப்பு கண்டறியப்பட்டு மொத்தமாக 3,078.800 மெ.டன் உரங்களுக்கு விற்பனை தடை வழங்கப்பட்டுள்ளது.  இதுதவிர, உரக்கட்டுப்பாட்டு ஆணைபடி பட்டியலிடப்படாத இடுபொருள் 22.250 மெ.டன் இருப்பில் உள்ளதற்கும் விற்பனை தடை வழங்கப்பட்டுள்ளது. வேளாண்மை துறையின் “ஓ” படிவம் ஒப்புதல் இல்லாமல் மற்றும் உரிய பதிவேடுகள் பராமரிக்கப்படாமல் செயல்பட்ட நீரில் கரையும் உரங்கள் சிப்பமிடும் பிரிவிற்கு (பேக்கிங் யூனிட்) விற்பனை தடை விதிக்கப்பட்டது.ஆய்வில், உர நிறுவனத்திற்குரிய உயிர் ஊக்கி கொள்கலன் உறைகளில் உள்ள லேபிளில் அடக்க பொருட்களின் அளவு குறிப்பிடப்படவில்லை.  எனவே, உயிர் ஊக்கி 14.820 மெ.டன்னிற்கு விற்பனை தடை வழங்கப்பட்டுள்ளது.  

மேலும், அதனடிப்படையில் சேலத்தில் உள்ள உயிர் ஊக்கி தயாரிப்பு நிறுவனத்தில் இருப்பில் உள்ள 12.600 மெ.டன் உயிர் ஊக்கிக்கு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.   இருப்பு வைக்கப்பட்ட உர குவியல்களிலிருந்து 13 உர மாதிரிகள் தர பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் உரம் விற்பனை செய்யும் நிறுவனங்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள உர சேமிப்பு கிடங்குகளில் உரக்கட்டுப்பாட்டு ஆணையின்படி, அனுமதி வழங்கிய உரங்களை மட்டும் உர சேமிப்பு கிடங்குகளில் உரிய பதிவேடுகள் பராமரித்து இருப்பு வைக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரிய காலத்தில் தட்டுப்பாடின்றி தரமான உரங்கள் கிடைப்பதற்கு இதுபோன்ற திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

Tags : Tamil Nadu , 3,079 mt of fertilizer stocked illegally in 9 fertilizer storage warehouses in Tamil Nadu.
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...