×

வன்முறை, கலவரத்தை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபடும் பாஜ தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் பேட்டி

சென்னை: வன்முறை,  கலவரத்தை தூண்டுவதுமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை  முபாரக் கூறியுள்ளார். சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று அளித்த பேட்டி:
தமிழகத்தில் சில தினங்களாக கோவை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடந்தன. தமிழகத்தில் நிலவும் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் சில சதிகார கும்பல்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் இத்தகைய நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. காவல்துறை நேர்மையான முறையில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

ஆனால், இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுடன் இஸ்லாமியர்களையும், எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகளையும் தொடர்புபடுத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழக முதல்வரையும், காவல்துறையையும் வெளிப்படையாகவே மிரட்டுவதும், கருத்துச் சுதந்திரம் என்கிற பேரில் வன்முறை, கலவரத்தை தூண்டுவதுமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பாஜ தலைவர் அண்ணாமலை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றிய அரசின் அரசியல் பழிவாங்கும் கருவியான என்.ஐ.ஏ.வை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது. தமிழகம் அமைதி பூங்காவாக தொடர்ந்து திகழ தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் எடுக்க வேண்டும். அதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவினையும் வழங்கும்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில பொருளாளர்  அமீர் ஹம்சா, மாநில செயலாளர்கள் ரத்தினம், ஏ.கே.கரீம், மண்டல  தலைவர்கள் முகமது ரஷீத், ராஜா உசேன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : BJP ,Annamalai ,STBI ,President , Action should be taken against BJP leader Annamalai for inciting violence and riots: STBI State President interview
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...