×

அங்கீகரிக்கப்படாத மனைகளை பதிவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: அங்கீகரிக்கப்படாத மனைகளை பதிவு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், இதுதொடர்பான அறிக்கையை பதிவுத் துறை ஐஜி தாக்கல் செய்யுமாறும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த சரவணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் முறையான அங்கீகாரம் பெறாத வீட்டடி மனைகளை மோசடியாக விற்பனை செய்வதுடன், சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்கின்றனர். உள்ளாட்சி பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத நிலம், மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சட்டம் உள்ளது.

ஆனால், சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல் தேனி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் உஷாராணி முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுக்கிறார். இந்த அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்யவும், முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி,  ‘‘சம்மந்தப்பட்ட சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முறைகேடாக பத்திரம் பதிவதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்யும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு சட்டம் 22ஏ அமலான பிறகு கடந்த 2017 முதல் அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தால் அது தொடர்பான விபரங்களுடன் பத்திர பதிவுத்துறை தலைவர் (ஐஜி) தரப்பில் விரிவான அறிக்கை  தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.


Tags : IG , Strict action against those registering unauthorized plots: IG ordered to submit report
× RELATED தமிழக – கேரள எல்லையில் மேற்கு மண்டல ஐஜி புவனேஸ்வரி ஆய்வு