தூத்துக்குடி பஸ் நிலையத்தில் பாஜ நிர்வாகி ஆம்னி பஸ் மீது மண்ணெண்ணெய் குண்டுவீச்சு: இருவருக்கு வலை

தூத்துக்குடி: தூத்துக்குடி பாஜ நிர்வாகியின் ஆம்னி பஸ் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடியை சேர்ந்தஆம்னி பஸ் நிறுவன உரிமையாளர் ரமேஷ், பாஜ மாநில ஓபிசி அணி துணை தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இவரது நிறுவனத்தின் கோவை செல்லும் ஆம்னி பஸ், பயணிகளை ஏற்றுவதற்காக தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்திற்கும், 3ம் கேட் மேம்பாலத்திற்கும் இடையே நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது ஒரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், பைக்கை மேம்பாலத்தில் நிறுத்தி, அதிலிருந்தவாறே பஸ்சின் மீது மண்ணெண்ணெய் குண்டுகளை  வீசி விட்டு தப்பினர். பஸ்சின் அருகே சாலையில் விழுந்து இந்த குண்டுகள் வெடித்தது. இந்த குண்டு வீச்சால் பஸ்சுக்கோ, பயணிகளுக்கோ பாதிப்பு இல்லை. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார், எஸ்பி பாலாஜி சரவணன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

பாஜ பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு: தேனி மாவட்டம், சின்னமனூர் 12வது வார்டு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பாஜவின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில தலைவராக உள்ளார். இவரது மனைவி கிருஷ்ணவேணி 12வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக உள்ளார். சின்னமனூர் - தேனி சாலையில் இவருக்கு சொந்தமான தனியார் பள்ளி பகுதியில் தனது காரை நிறுத்தி விட்டு நேற்று சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது நான்கு பக்கமும் உள்ள கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தது. புகாரின்படி சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர். பொள்ளாச்சியில் பாஜ, இந்து முன்னணி நிர்வாகிகள் கார் உடைப்பு விவகாரத்தில், 3 பேரை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம், மண்டைக்காடு அருகே தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் முஸ்ஸாமில் என்ற ஷமில்கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: