×

சங்கராபரணி ஆற்று மேம்பாலத்தில் பாதுகாப்பு இல்லாத நிலையில் மின் ஒயர்கள்-அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருக்கனூர் : திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு கிராமங்களுக்கு இடையே சங்கராபரணி ஆறு உள்ளது. சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகை அணையுடன் கூடிய மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் இருபுறங்களிலும் 30க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் உள்ளன. இந்த மேம்பாலம் தமிழக-புதுச்சேரி எல்லை பகுதியில் உள்ளதால் இவ்வழியாக தினமும் காலையிலும், மாலையிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மாலை நேரத்தில் பொழுதுபோக்குக்காகவும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பாலத்தின் மீது வந்து அமர்ந்துவிட்டு செல்கின்றனர். இந்த பாலத்தின் மீதுள்ள தானியங்கி மின்விளக்குகள் தினமும் மாலை 6 மணிக்கு எரிய தொடங்கி மறுநாள் காலை 6 மணியளவில் தானாகவே நின்று விடும்படி பொருத்தப்பட்டிருந்தன. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக மின் விளக்குகள் எரியாமலேயே காட்சி பொருளாக இருந்து வந்தன.

இத்தொகுதி எம்எல்ஏவும், உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் உடனடியாக தொகுதியில் உள்ள அனைத்து விளக்குகளையும் சரி செய்யுமாறு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் திருக்கனூர் கடைவீதியில் உள்ள ஹைமாஸ் விளக்குகள் மற்றும் தொகுதியில் உள்ள அனைத்து விளக்குகளும் எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டு தினமும் எரிந்து வருகின்றன.
 இந்நிலையில் சங்கராபரணி ஆற்று மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகளுக்கு செல்லும் மின் ஒயர்கள் பாதுகாப்பாக மூடப்படாமல், திறந்தவெளியில் மின் ஒயர்கள் தொங்கிக் கொண்டு இருக்கின்றன. இதனால் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தற்போது மழைக்காலம் என்பதால் திறந்த நிலையில் தொங்கி கொண்டிருக்கும் ஒயர்கள் மூலம் மின்சாரம் பாய்ந்து உயிர் சேதம் ஏற்படும் நிலையில் உள்ளது.  ஏற்கனவே அரியாங்குப்பம் மேம்பாலத்தில் இதுபோல் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். எனவே, பொதுப்பணி மற்றும் மின்துறையினர் உடனடியாக நேரில் பார்வையிட்டு பாதுகாப்பான முறையில் மின் ஒயர்களை வைத்து புதிதாக மூடி போட்டு சரி செய்ய வேண்டும். மேலும் எரியாமல் உள்ள மின்விளக்குகளையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sankarabarani , Tirukanur : Sankaraparani river is located between Koonichampatu and Manalipattu villages near Thirukanur. Shankaraparani
× RELATED புதுச்சேரி வில்லியனூரில் உள்ள...