×

10 நாட்களுக்கு கோலாகலம் மைசூரு தசரா விழா இன்று தொடக்கம்

புதுடெல்லி: புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தொடங்கி வைக்கிறார். கர்நாடக மாநிலம், மைசூருவில் தசரா விழா இன்று தொடங்கி வரும் 3ம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடங்கி வைக்க ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், ஜனாதிபதியின் நிகழ்ச்சிகள் குறித்த அறிக்கையை ராஷ்டிரபதி பவன் நேற்று வெளியிட்டது.
அதன்படி, இன்று மைசூருக்கு வரும் ஜனாதிபதி, சாமுண்டி மலையில் தசரா விழாவை தொடங்கி வைக்கிறார். அங்கிருந்து, ஹூப்பள்ளி செல்லும் அவர், `போரா சன்மானா’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பின்னர், தார்வாட்டில் புதிதாக தொடங்கப்படும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை (ஐஐஐடி) தொடங்கி வைக்க உள்ளார். நாளை, அவர் பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிகல்ஸ் நிறுவனத்தில், ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் இயந்திர உற்பத்தி பிரிவை தொடங்கி வைக்க இருக்கிறார். அத்துடன், வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் தென் மண்டல பிரிவுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், பெங்களூருவில் புனித ஜோசப் பல்கலைக்கழகத்தை தொடங்கி வைக்க உள்ளார். கர்நாடக அரசு சார்பில் நடத்தப்படும் விழாவில் பங்கேற்பார். நாளை மறுநாள் டெல்லி திரும்புவார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kolakalam Mysuru Dussehra festival , The 10-day Kolakalam Mysuru Dussehra festival begins today
× RELATED 10 நாட்களுக்கு கோலாகலம் மைசூரு தசரா விழா இன்று தொடக்கம்