வத்திராயிருப்பு அருகே புதர்மண்டிக் கிடக்கும் கண்மாய் மதகுப் பகுதி: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே, விராகசமுத்திரம் கண்மாய் மதகுப் பகுதியில் செடிகள் முளைத்து புதர் மண்டிக் கிடக்கிறது. மேலும், மதகுப் பகுதியின் முன்புறம் உள்ள பிளாட்பார்ம் பகுதியும் சேதமடைந்துள்ளது. இவற்றை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே, பிளவக்கல் என்னும் இடத்தில் பெரியாறு, கோவிலாறு அணைகள் உள்ளன.

மழைகாலங்களில் அணைகளிலிருந்து நீர்வரத்து அதிகரிக்கும்போது, வத்திராயிருப்பு பெரியகுளம், விராகசமுத்திரம் ஆகிய கண்மாய்கள் நிரம்பி, நகருக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும். கடந்த 1984, 1992 ஆகிய ஆண்டுகளில் இரண்டு கண்மாய்களிலும் உடைப்பு ஏற்பட்டு, வத்திராயிருப்பு நகருக்குள் வெள்ளம் புகுந்ந்தது. வீடுகள், கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. உயிர்ப்பலியும் ஏற்பட்டது. அப்போது இரண்டு கண்மாய்களின் கரைகளும் பலமில்லாமல் இருந்தன. அதிக நீர்வரத்து காரணமாக கண்மாய்க் கடைகளில் உடைப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மழைகாலம் தொடங்கும் முன் கண்மாய்க் கரைகள், மதகுப்பகுதிகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:

மழை காலம் தொடங்கும் முன் கண்மாய்க் கரைகளின் பலம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மதகுகளை பழுது பார்க்க வேண்டும். மதகுகளில் ஆயில், கிரீஸ் வைத்து மதகுகள் சரியாக இயங்குகிறதா என சோதனை செய்ய வேண்டும். விராகசமுத்திரம் கண்மாய் மூலம் 174.08 ஹெக்டேர் பாசன வசதி பெறுகிறது. இக்கண்மாயின் வடக்குப் பக்கம் நான்கு மதகுகள் உள்ளன. அவைகள் சரியாக இயங்குகின்றதா என ஆய்வு செய்ய வேண்டும். மதகுகளின் முன்புறம் உள்ள பிளாட்பாரம் சேதமடைந்துள்ளது. உள்புறம் செடிகள் முளைத்து புதர்மண்டிக் கிடக்கிறது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி காலத்தில் மதகுகள் எந்தவித பராமரிப்பு பணிகளும் செய்யப்படவில்லை. எனவே, உடனடியாக மதகுகளை பராமரிக்க வேண்டும்.

விராகசமுத்திரம் கண்மாயிலிருந்து வில்வராயன் குளம் கண்மாய் வரை உள்ள வரத்து கால்வாயை அளவீடு செய்து, செடிகள் மற்றும் கழிவுநீர் குப்பைகள் துார்வாரி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விராகசமுத்திரம் கண்மாய் மதகுகள் உள்பகுதியில் செடிகள், மதகுகளை மறைக்கும் வண்ணம் வளர்ந்துள்ளன. மதகுகளின் இருபுறமும் உள்ள கரைகள் பலவீனமாக உள்ளதால், கரைகளை உடனடியாக பலபடுத்த வேண்டும். மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், விராகசமுத்திரம் கண்மாயில் மதகுகள் உள்ளிட்டவைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: