×

பாவூர்சத்திரத்தில் இருந்து கடையம் செல்லும் சாலையில் படுகுழிகளால் அடிக்கடி விபத்து: 20க்கும் மேற்பட்ட ஊர்மக்கள் தவிப்பு

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரத்தில் இருந்து திப்பணம்பட்டி, நாட்டார்பட்டி வழியாக கடையம் செல்லும் 3 கி.மீ நீள சாலையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளங்கள் இருப்பதால் தினமும் விபத்து ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. இச்சாலையை பயன்படுத்தும் 20க்கும் மேற்பட்ட ஊர்மக்களும் எப்போது விடிவு பிறக்குமோ? என்கிற எதிர்பார்ப்பில் உள்ளனர். பாவூர்சத்திரத்தில் இருந்து திப்பணம்பட்டி, ஆவுடையானூர் வழியாக அரியப்புரம், வெக்காலிப்பட்டி வழியாக கடையம் செல்லலாம். அதேபோன்று திப்பணம்பட்டியிலிருந்து நாட்டார்பட்டி வழியாக அரியப்புரம் சென்று அங்கிருந்து கடையம் செல்லலாம்.

இதில் திப்பணம்பட்டியிலிருந்து நாட்டார்பட்டி வழியாக செல்லும் அரியப்புரம் ரோடு சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் சுமார் 3000 பள்ளங்கள் கொண்ட ஆபூர்வமான சாலையாக மாறியுள்ளது. இப்பாதையில் விபத்து இன்றி வாகனத்தை ஒட்டுவது பெரும் சாதனையாக கருத வேண்டியுள்ளது. இந்த சாலையில் மழைக்காலங்களில் நீர் நிரம்பிய குட்டையாக காணப்படுகிறது. இந்த மாதிரியான சமயங்களில் சாலையில் பள்ளம் தெரியாமல் வாகனத்தை இறக்கிவிட்டு கீழே விழுந்து எழும் சம்பவங்களும் அவ்வப்போது நடப்பது வாடிக்கையாக உள்ளது. இந்த சாலையை வெக்காலிப்பட்டி, மேட்டூர், அரியப்புரம், வெள்ளைப்பனையேறிப்பட்டி, கணக்கநாடார்பட்டி என 20க்கும் மேற்பட்ட ஊர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் பணி நிமித்தம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவோ, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் இந்த சாலையில் தான் சென்று வருகின்றனர். இந்த சாலையை கடக்கும் வாகனங்கள் மேடு, பள்ளங்களில் இறங்கி ஏறும்போது வாகனம் குலுங்குகிறது. இதனால் வாகனங்களின் இருக்கையில் இருந்து பயணிகள் கீழே விழும் சம்பவங்களும் நிகழ்கிறது. இந்த சாலையில் தினமும் தனியார் பஸ், பிற வாகனங்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது.

இந்த சாலை படுமோசமாக இருப்பதை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது வேதனையாக உள்ளது. இந்த சாலை வழியாக மருத்துவமனைக்கு நோயாளிகளை ஆட்டோவில் அழைத்து சென்று வருவது ஆபத்தானவையாக உள்ளது. குறிப்பாக கர்ப்பிணிகளை ஆட்டோவில் இந்த மோசமான சாலையில் சவாரிக்கு ஏற்றி செல்ல டிரைவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த சாலையை பயன்படுத்தும் 20க்கும் மேற்பட்ட ஊர்மக்களும் இச்சாலைக்கு எப்போது விடிவு பிறக்குமோ? என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

விளைபொருட்கள் கொண்டு செல்ல முடியாமல் அவதி
இப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளதால் விளைவிக்கப்பட்ட விவசாயப்  பொருட்களை பைக்கில் இச்சாலை வழியே பாவூர்சத்திரம் கொண்டு செல்ல வேண்டும். ஆனால், மேடு, பள்ளங்களாக காட்சியளிக்கும் இந்த சாலை வழியாக விவசாய பொருட்கள் கொண்டு செல்லும் போது கீழே விழுகிறது. இதனால், அந்த விளைபொருட்களை விற்க முடியாமல் விவசாயிகள்  பரிதவிக்கும் நிலையை பல நேரங்களில் காண முடிகிறது.

பயணத்தால் முதுகுவலி
கடையத்தில் இருந்து பாவூர்சத்திரத்துக்கு அரியப்புரம், திப்பணம்பட்டி பகுதியில் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் அதிகம் நிறைந்தவை. இப்பகுதி மக்கள் மினிபஸ், ஆட்டோக்களையும் நம்பிதான் பயணிக்கின்றனர். மினி பஸ்கள் இந்த மோசமான சாலையில் வேகமாக செல்லும்போது பயணிகள் தாங்களை பாதுகாத்து கொள்வது சவாலாகவே உள்ளது. இந்த சாலைகளில் பயணித்தால் முதுகுவலி முற்றிலும் இலவசம் என்பதுபோல பயணிகளுக்கு முதுகுவலி ஏற்படுகிறது. முதியவர்கள், குழந்தைகளுடன் பயணிப்பவர்கள் இந்த சாலையில் பயணிப்பதை தவிர்ப்பது நல்லது என்கிற நிலை தான் உள்ளது.

Tags : Bhavoorchatra ,Kadayam , Potholes cause frequent accidents on Bhavoorchatra to Kadayam road: More than 20 villagers lost
× RELATED பாவூர்சத்திரத்தில் நடுவழியில்...