×

அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்து மின்வாரிய ஊழியரை குடும்பத்தோடு கட்டிப்போட்டு 15 சவரன், 2 கிலோ வெள்ளி, ரூ80 ஆயிரம் கொள்ளை: 10 முகமூடி ஆசாமிகளுக்கு வலை

சென்னை: மதுராந்தகம் அருகே அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்து மின் வாரிய ஊழியரை குடும்பத்தோடு கட்டிப்போட்டு 15 சவரன், 2 கிலோ வெள்ளி மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற 10 முகமூடி ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள மருவூர் அவின்யூவில் வசிப்பவர் ஹரிஹரன். மின்வாரிய துறையில் வேலை பார்த்து வருகிறார். இவர், வேலைக்கு சென்று வந்து உணவு சாப்பிட்டு விட்டு நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தனது குடும்பத்தினருடன் தூங்கினார்.

இந்நிலையில், நேற்று அதிகாலையில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஹரிஹரன், படுக்கையில் இருந்து எழுந்து வந்து கதவை திறந்தார். அப்போது, திபுதிபுவென முகமூடி அணிந்திருந்த 7 பேர் கும்பல், வீட்டுக்குள் புகுந்தது. 3 பேர் ஜன்னல் பக்கத்தில் நின்றிருந்தனர். அவர்களை பார்த்ததும் ஹரிஹரன் அதிர்ச்சியடைந்தார். சத்தம்கேட்டு படுக்கையில் இருந்த அவரது மனைவி, மகள் எழுந்து வந்தனர். அனைவரது கொள்ளை ஆசாமிகள் செல்போன்களையும் பறித்து முதலில் சுவிட்ச் ஆப் செய்தனர்.

பின்னர் ஹரிஹரன், அவரது மனைவி, மகள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, ‘சத்தம் போட்டால் குத்தி விடுவோம்’ என கூறி 3 பேரையும் கயிற்றால் கட்டினர்.  மனைவி ஜெயலெட்சுமி மற்றும்  சுமதியை கட்டிப்போட்டனர், ஹரிஹரனை தனி அறையில் போட்டு  பூட்டிவிட்டனர். பின்னர், பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ80 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடினர். தனியறையில் பூட்டப்பட்ட ஹரிஹரன் அங்கிருந்த பொருட்களால் கதவை உடைத்துக் கொண்டு அறையில் இருந்து வெளியில் வந்து மனைவி, மகளை மீட்டார்.

பின்னர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு அச்சிறுப்பாக்கம் போலீசார் விரைந்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. போலீசார் அந்தப்பகுதியில் அதிகாலையில் போன் கால்களை ஆய்வு செய்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கொள்ளையர்களின் உருவங்கள் பதிவாகி இருக்கிறதா என பார்த்தனர்.

சம்பவம் குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் (பொ) தீவிரமாக விசாரித்து வருகிறார். மருவூர் பகுதி சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது போலீசாருக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை. தற்போது, பள்ளிப்பேட்டை பகுதி சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  

தொடர் கைவரிசை
கொள்ளை நடந்த இடம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டிய பகுதி. இப்பகுதியில் பெரும்பாலும் தனித்தனி வீடுகள் உள்ளன. இரவு நேரத்தில் இந்தப்பகுதி காடுகள் போன்றுதான் காணப்படும். தேசிய நெடுஞ்சாலையொட்டி தனியாக அமைந்திருப்பதால் வீடுகளில் கொள்ளையடிக்க மர்ம ஆசாமிகளுக்கு வசதியாக உள்ளது. ஏற்கனவே அச்சிறுப்பாக்கம் அருகில் உள்ள கடைமலை புத்தூர் பகுதியில் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு இதுபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சில நாட்களுக்குப்பின் அந்த குற்றவாளிகளை சேலத்தில் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Sawaran , They broke into the house early in the morning and tied up the power worker with his family and robbed 15 sawan, 2 kg silver, Rs 80 thousand: 10 mask A net for assassins
× RELATED நாகையில் 110 சவரன் நகைகள் கொள்ளை..!!