×

கேரளாவில் நடக்கும் நவராத்திரி விழாவுக்காக பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி விக்ரகங்கள் புறப்பட்டன: தமிழக, கேரள அமைச்சர்கள் பங்கேற்பு

நாகர்கோவில்: திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி விக்ரகங்கள் புறப்பட்டன. முன்னதாக நடந்த உடைவாள் மாற்றும் நிகழ்ச்சியில் தமிழக, கேரள அமைச்சர்கள் கலந்து கொண்டனர். குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த போது, பத்மநாபபுரம் அரண்மனையில் தான் நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். பின்னர் தாய் தமிழகத்துடன், குமரி மாவட்டம் இணைந்த பின், அரண்மனையில் நடைபெற்ற நவராத்திரி விழாவும் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது.

 ஆனாலும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவுக்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுவாமி விக்ரகங்கள் கொண்டு செல்லப்படுவது பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.
நவராத்திரி காலத்தில் சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம், வேளிமலை குமாரகோயிலில் இருந்து தேவசேனாதிபதி முருகன் விக்ரகம், பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி தேவி ஆகிய விக்ரகங்கள் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பவனியாக கொண்டு செல்லப்படும். அங்கு 9 நாட்கள் நவராத்திரி பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு சுவாமி விக்ரகங்கள் மீண்டும் குமரி மாவட்டத்துக்கு கொண்டுவரப்படும்.

இந்த ஆண்டு நவராத்திரி விழாவுக்கான சுவாமி விக்ரகங்கள் பவனி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து இன்று (23ம் தேதி) காலை தொடங்கியது. இதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோயிலில் இருந்து நேற்று பத்மநாபபுரம் கொண்டு வரப்பட்டது. இதே போல் வேளிமலை குமாரகோயிலில் இருந்து தேவசேனாதிபதி முருகன் விக்ரகம், பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி தேவி விக்ரகம் இன்று காலை பத்மநாபபுரம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டன. 3 விக்ரகங்களும் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து பவனியாக இன்று காலை புறப்பட்டன. முன்னதாக அரண்மனையில் உள்ள உப்பரிகை மாளிகையில் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கேரள அமைச்சர்கள் ராதாகிருஷ்ணன், சிவன்குட்டி மற்றும் தமிழக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் சுவாமி விக்ரகங்கள் ஊர்வலம் தொடங்கியது. உடைவாள் முன் செல்ல, ஊர்வலம் சென்றது. தமிழக, கேரள போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை மேற்கொண்டனர். செண்டை மேளத்துடன் கதகளி, மயிலாட்டம் போன்றவை நடந்தன. பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் சிலை யானை மீது ஊர்வலமாக முன்னே செல்ல அதை தொடர்ந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், குமாரகோயில் முருகன் ஆகியோர் பல்லக்கில் பின் தொடர்ந்தனர். வழி நெடுக பக்தர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.


Tags : Swami ,Padmanabhapuram Palace ,Navratri festival ,Kerala ,Tamil Nadu , Kerala, Navratri Festival, Padmanabhapuram Palace, Swami idols, Tamil Nadu, Kerala Ministers Participation
× RELATED ராமகிருஷ்ண மிஷனின் புதிய தலைவராக சுவாமி கவுதமானந்தாஜி மகாராஜ் தேர்வு