×

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் கடனுதவி: செங்கல்பட்டு கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள அறிக்கை:
பெருமளவில் விவசாய தொழில் புரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை பொருளாதாரத்தில் தற்சார்பு உடையவர்களாக மாற்றிடும் வகையில், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் கறவைமாடு வாங்க ரூ.1.5 லட்சம் திட்டத்தொகையில் 30 சதவீதம் அதாவது ரூ.45,000 மானியமும் மீதமுள்ள தொகை வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அறிவிப்பு  வெளியிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரருக்கு வயது வரம்பு 18 முதல் 65 வரை இருக்கவேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த தொழில் செய்பவராக இருக்கவேண்டும். விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்கக்கூடாது.

இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடராக இருப்பின்  http://application.tahdco.com என்ற இணையதளத்திலும், பழங்குடியினராக இருப்பின் http://fast.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் தொழில் முனைவோர் திட்டத்தில் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரர் புகைப்படம், சாதிச்சான்று, வருமானச்சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை மற்றும் மாடு வாங்குபவரிடமிருந்து பச்சைத்தாளில் மாடுகளின் விலையை குறிப்பிட்டு எழுதி வாங்கிய சான்று ஆகிய சான்றுகளுடன் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். விண்ணப்பங்களை தாட்கோ இணையதளத்தில் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். எனவே, வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Tags : Adi Dravidar , Adi Dravidar, Tribals, Loan with Subsidy for Buying Dairy Cows, Chengalpattu Collector Information
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...