×

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்குகளை எதிர்த்து வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணை: ஐகோர்ட் அமர்வு அனுமதி

சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளின் டெண்டர் முறைகேடு தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கவும், வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகவும் தமிழக அரசுத்தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆட்சேபங்களை தலைமை நீதிபதி அமர்வு, நிராகரித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு, வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை, எம்.பி., எம்.எல்.ஏ.க்க்ளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது.  வேலுமணி தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வான நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி,

பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு நகலை தாக்கல் செய்து முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று முறையீடு செய்தார்.  அப்போது அவர், ஊழல் தடுப்பு சட்டத்தில் இடைக்கால நிவாரணம் வழங்க தடை உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். இதையடுத்து, வேலுமணியின் மனுக்களை நாளை (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags : Mailor ,iCourt , Petitions filed by Velumani against Municipal Corporation tender malpractice cases hearing today: Court session allowed
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு