×

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின் விளக்குகள் பராமரிப்பு மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.89.56 லட்சம் அபராதம்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின் விளக்குகள் பராமரிப்பை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த 10 மாதங்களில் ரூ.89.56 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் மின்துறையின் மூலமாக 2,91,415 தெரு விளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.  இவை அனைத்தும் மின் சேமிப்பு வகை எல்.இ.டி தெரு விளக்குகளாகும்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.33.57 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 5,594 புதிய தெருவிளக்கு மின்கம்பங்கள் மற்றும் 85 உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கவும், ரூ.7.53 கோடி மதிப்பீட்டில் மிகவும் துருப்பிடித்த, உயரம் குறைவான 1997 தெரு விளக்கு மின்கம்பங்கள் புதிய மின்கம்பங்களாக மாற்றியமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 10 மண்டலங்களில் தெருவிளக்கு மின்கம்பங்களை இயக்கி பராமரிக்க ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.  இந்த ஒப்பந்தத்தின்படி புகார் பெறப்பட்ட குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மின்விளக்குகளை ஒளிர செய்யாமல் இருந்தாலோ அல்லது பராமரிப்பு பணிகளுக்கான பணியாளர்கள் மற்றும் வாகனங்களை சரியான எண்ணிக்கையில் வழங்காமல் இருந்தாலோ ஒப்பந்ததார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ஒப்பந்தத்தின்படி, புகார் தெரிவித்து 24 மணிநேரத்திற்கு மேலாக மின்விளக்குகள் சரிசெய்யப்படாமல் இருந்தால், நாளொன்றுக்கான பராமரிப்பு தொகையில் 5%மும், 36 மணிநேரத்திற்கு மேலாக மின்விளக்குகள் சரிசெய்யப்படாமல் இருந்தால், நாளொன்றுக்கான பராமரிப்பு தொகையில் 10%மும், 48 மணிநேரத்திற்கு மேலாக மின்விளக்குகள் சரிசெய்யப்படாமல் இருந்தால், நாளொன்றுக்கான பராமரிப்பு தொகையில் 15%மும் அபராதமாக விதிக்கப்படுகிறது.

அதனடிப்படையில், 2021 அக்டோபர் மாதம் முதல் 2022  ஆகஸ்ட் மாதம் வரை கடந்த 10 மாதங்களில் மின்விளக்குகள் பராமரிப்பு பணிகளை ஒப்பந்தத்தில் உள்ளவாறு சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்தாரர்களுக்கு ரூ.89,56,296 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராத விவரம்
வ. எண்       மண்டலங்கள்    விதிக்கப்பட்ட அபராதத் தொகை (ரூ.)    
1    திருவொற்றியூர்         
2    மணலி        2,26,125    
3    மாதவரம்        1,12,707    
4    தண்டையார்பேட்டை44,98,941    
5    திரு.வி.க.நகர்    1,13,546    
6    அம்பத்தூர்    20,09,399    
7    வளசரவாக்கம்    20,900    
8    ஆலந்தூர்        1,45,952    
9    பெருங்குடி    4,11,150    
10    சோழிங்கநல்லூர்    3,48,246    
    மொத்தம்        89,56,296    

இராயபுரம், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களில் மாநகராட்சியின் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒளிராத தெருவிளக்குகள் மற்றும் இதர குறைபாடுகள் குறித்து 1913 என்ற உதவி எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.  மேலும், பராமரிப்பு பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு தெருவிளக்குகள் குறித்த புகார்களை உடனடியாக தீர்வு செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  தவறும் ஒப்பந்ததாரர்களின் மீது ஒப்பந்தத்தின் படி அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : Chennai Corporation , Chennai Corporation, maintenance of electric lights, contractors, fines
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...