×

5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்: திருப்பதி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருமலை: வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதற்காக 5 மணிநேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டு, கோயில் முழுவதும் மூலிகை கலவை தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வருகிற 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 5ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று  ஏழுமலையான் கோயிலை சுத்தம் செய்யும் பணி (ஆழ்வார் திருமஞ்சனம்) காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.

மூலவர் மீது பட்டு வஸ்திரத்தால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கல் மண்டபங்கள், தங்க கொடிமரம் உள்ளிட்ட அனைத்து இடங்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், கட்டி கற்பூரம், மூலிகை திரவியங்கள் கொண்ட கலவையை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. பின்னர், மூலவர் மீது சாத்தப்பட்ட பட்டு வஸ்திரம் அகற்றி சிறப்பு பூஜை செய்யப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர், 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால், சுவாமி தரிசனத்திற்கு 5 மணிநேரத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், விஐபி தரிசனமும் ரத்து செய்யப்பட்டது.

12 மணிநேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் ரூ67,276 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 31,140 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். ரூ5.71 கோடி காணிக்கையாக கிடைத்தது. பக்தர்கள் சுமார் 12 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags : Alvar Thirumanjanam ,Tirupati Temple , 5 Hours Darshan Stop: Alvar Thirumanjanam at Tirupati Temple
× RELATED திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்...