×

திருக்குறுங்குடியில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட பயணியர் விடுதி பராமரிப்பின்றி சிதிலமடைந்தது-சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

களக்காடு : திருக்குறுங்குடியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த பயணியர் விடுதி கட்டிடம் பராமரிப்பின்றி சிதிலமடைந்தது. இந்த கட்டிடத்தை மறுசீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். களக்காடு அருகே திருக்குறுங்குடி கைகாட்டி ஜங்சனில் கடந்த காலங்களில் தமிழக அரசின் பயணிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இக்கட்டிடம் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

காமராஜர் இந்த பகுதிக்கு சுற்றுப்பயணம் வந்த போது இந்த கட்டிடத்தில் தங்கியதாக கூறப்படுகிறது. இது போன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இந்த பயணியர் விடுதியில் தங்கி சென்றுள்ளனர். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கட்டிடம் தற்போது பராமரிப்பின்றி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. தற்போது இக்கட்டிடங்களில் பல பகுதிகள் சிதைந்து எஞ்சிய சுவர்கள் மட்டுமே வரலாற்று நினைவு சின்னமாக காட்சி அளிக்கிறது.

பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமான இக்கட்டிடத்தில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. புதர்களுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் தஞ்சமடைந்துள்ளன. இவைகள் அடிக்கடி தெருக்களில் உலா வந்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் இக்கட்டிட வளாகத்தில் பழமை வாய்ந்த தேக்கு உள்ளிட்ட மரங்களும் உள்ளன. இந்த மரங்கள் கவனிப்பார் இன்றி கரையானுக்கு இரையாகி வருகிறது.

பாழடைந்து கிடக்கும் இந்த இடத்தில் மீண்டும் பயணிகள் தங்கும் விடுதியோ, அல்லது வேறு அரசு கட்டிடங்கள் கட்டி பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதில், மீண்டும் பயணிகள் தங்கும் விடுதி கட்டும் பட்சத்தில் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Thirukkurungudi , Kalakadu: A historic tourist hostel building built during the British rule in Thirukkurungudi is not maintained.
× RELATED திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் வசந்த உற்சவம்